search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை, திருவாரூர் - நாகையில் கடைகள் அடைப்பு: தனியார் பஸ்கள் இயங்கவில்லை
    X

    தஞ்சை, திருவாரூர் - நாகையில் கடைகள் அடைப்பு: தனியார் பஸ்கள் இயங்கவில்லை

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்களும் இயங்கவில்லை.
    தஞ்சாவூர்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக தி.மு.க. சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதன் படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி தஞ்சையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் இயங்கியது. அதில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. தஞ்சையில் காமராஜர் மார்க்கெட் செயல்படவில்லை. முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தஞ்சை அருகே உள்ள ஒரத்தநாடு, பூதலூர், செங்கிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டது.


    கும்பகோணத்திலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் ஓடவில்லை. தாராசுரம் மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. பாபநாசம், திருவிடை மருதூர், பந்த நல்லூர், ஆடுதுறை, நாச்சியார் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இதே போல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடா மங்கலம் பேரளம், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. திருத்துறைப்பூண்டியில் பஸ்கள், லாரிகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடவில்லை.


    நாகை மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு, தரங்கம்பாடி, செம்பனார் கோவில், திருக்கடையூர், ஆக்கூர், சங்கரம்பந்தல், பூம்புகார், வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், குத்தாலம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    தனியார் பஸ்களும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. ஓட்டல்களும் திறக்கப்படவில்லை. மருந்துக் கடைகள் மட்டும் திறக்கபட்டு இருந்தன. சீர்காழி நகர வர்த்தக சங்கம், வர்த்தக நலச்சங்கம் ஆகியவை சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தென்பாதி, கொள்ளிடம் முக்கூட்டு, கடைவீதி ஆகியவைகளில் ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
    Next Story
    ×