search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெர்மாகோல் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு: அமைச்சர் செல்லூர் ராஜு
    X

    தெர்மாகோல் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு: அமைச்சர் செல்லூர் ராஜு

    தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் தெர்மாகோல் திட்டத்தை பொதுமக்கள் வரவேற்று பாராட்டுவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை மேற்கு மாம்பலத்தில் ஈஸ்வரன் கோவில் தெரு, குப்பயா செட்டி தெருவில் உள்ள ரே‌ஷன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அங்கு நின்ற பொது மக்களிடம் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? எடை சரியாக உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பகுதியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இல்லை என்ற புகார் வந்தது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்றால் 1967 என்ற எண்ணிலும் இலவச டோல் எண்ணிலும் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

    தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுவதாக டெல்லியில் இருந்து வந்த பாராளுமன்ற குழுவினர் ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்துள்ளனர்.


    பொது வினியோகத் திட்டத்தில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது.

    ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ரே‌ஷன் கடைகளில் முறைகேடு செய்த ஊழியர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    கடந்த 6 மாதத்தில் 259 ஊழியர்கள் முறைகேடு செய்ததாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ரூ.5000-க்கும் மேலாக முறைகேடு செய்தால் கிரிமினல் வழக்கும், அதற்கு குறைவாக இருந்தால் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதையில் கூட்டுறவுத்துறை சென்று கொண்டு இருக்கிறது. தொடர் கள ஆய்வு செய்வதால் முறைகேடுகள் குறைந்துள்ளது.

    விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நடைபெறும் வேலை நிறுத்தம் தேவையற்றது. விவசாயிகள் போராட்டம் வாபஸ் ஆன பிறகு எதற்கு முழு கடை அடைப்பு. அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கால் கூட்டுறவு துறையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தண்ணீர் ஆவியாவதை தடுப்பதற்கு ‘தெர்மாகோல்’ திட்டத்தை அதிகாரிகள் கொண்டு வந்தனர். தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில் புதிய முயற்சியை மேற்கொள்வது நல்லது என்ற அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.

    தண்ணீர் ஆவியாவதை தடுப்பதற்கு தெர்மாகோல் திட்டம் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தது. இந்த திட்டத்தை மக்கள் வரவேற்று பாராட்டுகிறார்கள். பிளாஸ்டிக் ‘பந்து’ மூலமும் ஆவியாவதை தடுக்கலாம். ஆனால் அதற்கு அதிக செலவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×