search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: தமிழகம் முழுவதும் பஸ் மறியல்
    X

    விவசாயிகளுக்கு ஆதரவாக பந்த்: தமிழகம் முழுவதும் பஸ் மறியல்

    விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் எதிர்கட்சியினர் சாலைகளில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர். இதையொட்டி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது.

    தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் இந்த முழு அடைப்பில் கலந்து கொண்டன. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல ஓடின. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை.

    முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சாலைகளில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர். இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.


    திருவாரூரில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பஸ் மறியலில் ஈடுபட்டார். இன்று காலை 9.15 மணியளவில் திருவாரூர் சன்னதி தெருவில் இருந்து பேரணியாக புதிய பஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார்.

    அவருடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர். பாலு, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் பொய்யாமொழி, மதிவாணன் உள்ளிட்டோரும் சென்றனர்.


    புதிய பஸ் நிலையம் அருகில் மு.க.ஸ்டாலின் மறியலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கைதானார்கள். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறும் படி மு.க.ஸ்டாலினிடம் போலீசார் கூறினர். ஆனால் மு.க.ஸ்டாலின் நாங்கள் நடந்தே வருகிறோம் என்றார்.

    அதன்படி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன் தமிழ் திருமண மண்டபத்திற்கு நடந்தே சென்றனர். அனைவரும் மண்டபத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அனைவரும் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.



    எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு, எஸ்றா சற்குணம், எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன் மற்றும் ராயபுரம் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகே சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன் தலைமையில் தொழிற்சங்கத்தின் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே காஞ்சி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் 800-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சத்தியமூர்த்தி, இலக்கிய அணி தலைவர் படப்பை ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    படப்பையில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் 300 பேரும், குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் 800 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் அனைத்து கட்சியினர் திரண்டனர். பின்னர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற பஸ்களை மறித்தனர். கே.என்.நேரு உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×