search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் பஸ்- ஆட்டோ ஓடவில்லை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    புதுவையில் பஸ்- ஆட்டோ ஓடவில்லை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையிலும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் காரணமாக பஸ், ஆட்டோ ஓடவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. புதுவையில் ஆளும் கட்சியான காங்கிரசும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.

    இதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுவையில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. புதுவையில் பெரும்பாலான பஸ்கள் தனியார் பஸ்கள் தான் என்பதால் பயணிகள் பாதிப்பிற்கு ஆளாகினர். அதேநேரத்தில் தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்போடு இயக்கப்பட்டது.

    தமிழகத்திலிருந்து புதுவைக்கு வந்த பஸ்களும், புதுவை வழியாக தமிழகம் செல்லும் பஸ்களும் இயக்கப்பட்டது. புதுவை அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள், டெம்போக்கள், லாரிகளும் ஓடவில்லை. ஒரு சில தனியார் கல்லூரி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையம், பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நீண்டநேரம் காத்துக்கிடந்தனர்.

    நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, அண்ணாசாலை, காந்தி வீதி, மி‌ஷன் வீதி, நேருவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பெரியமார்க்கெட், சின்னமார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், அரியாங்குப்பம் மார்க்கெட் ஆகியவை இயங்கவில்லை.


    தொழிற்பேட்டைகளில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் ஒரு சில மட்டுமே இயங்கின. திரையரங்கில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பந்த் போராட்டத்தால் பாதிக்கப்பட்டது.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நகரெங்கும் போலீசார் ரோந்து சென்றனர். முக்கிய சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×