search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு போராட்டம் புதுவையில் நாளை பஸ் - ஆட்டோ ஓடாது
    X

    முழு அடைப்பு போராட்டம் புதுவையில் நாளை பஸ் - ஆட்டோ ஓடாது

    விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் நாளை பஸ், ஆட்டோ இயங்காது.
    புதுச்சேரி:

    காவிரி மேலாண்மை வாரியம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    வறட்சி நிவாரணமாக விவசாய குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகரான டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைமையிலான அனைத்துக்கட்சி போராட்டக்குழு நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

    இதேபோல புதுவையிலும் தி.மு.க. தலைமையில் ஆளும்கட்சியான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ராஷ்ட்ரீய ஜனதாதளம், புதிய நீதி கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், படைப்பாளி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

    விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு வியாபாரிகள், தொழில் அதிபர்கள், மீனவர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், ஆட்டோ, டெம்போ, பஸ் உரிமையாளர்கள், திரையரங்கு நிர்வாகத்தினர் ஆதரவு தர வேண்டும் என கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் இன்று அனைத்து கட்சி போராட்டக்குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டக்குழுவில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சியினர் அண்ணா சாலை, நேருவீதி, காமராஜர் சாலை, மி‌ஷன் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள்தோறும் சென்று நோட்டீஸ் வழங்கி போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டு கொண்டனர்.

    இந்நிலையில் நாளை காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்குகிறது. பந்த் போராட்டத்தால் புதுவையில் தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

    நகர், புறநகர், கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட உள்ளது. ஆளும்கட்சியே இந்த பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து போராட்ட குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது: -

    டெல்லியில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தைக்காக ஒத்தி வைத்துள்ளனர். இருப்பினும் நாளை திட்டமிட்டபடி பந்த் போராட்டம் நடைபெறும்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் வைத்துள்ளோம். அனைத்து தரப்பினரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் உணர்வுப்பூர்வமாக ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர். இதனால் நாளை ஆட்டோ, டெம்போக்கள் இயங்காது. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். விவசாயிகளின் நலன்கருதி பந்த் போராட்ட சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முழு அடைப்பு போராட்டத்தில் பஸ் அதிபர் சங்கம் பங்கு பெறுவதாகவும். எனவே, நாளை பஸ்கள் ஓடாது என்று தனியார் பஸ் அதிபர் சங்க தலைவர் பாரதிகண்ணன் கூறி உள்ளார்.
    Next Story
    ×