search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதிகளை மீறி நாராயணசாமி செயல்படுகிறார்: கிரண்பேடி நேரடி குற்றச்சாட்டு
    X

    விதிகளை மீறி நாராயணசாமி செயல்படுகிறார்: கிரண்பேடி நேரடி குற்றச்சாட்டு

    விதிகளை மீறி முதல்வர் நாராயணசாமி செயல்படுகிறார் என்று கவர்னர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண் பேடிக்கும், முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் கடும் பனிப்போர் நிலவுகிறது.

    கவர்னர் கிரண்பேடி அரசின் செயல்பாடுகளை சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகிறார். இதற்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் தரப்பிலும் சமூக வலை தளங்களில் கவர்னர் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர்.

    அமைச்சர்களும், தேர்வு செய்யப்பட்ட அரசின் திட்டங்களை செயல்படுத்த கவர்னர் தடையாக உள்ளார் என்று குற்றம் சாட்டினர்.

    இவர்களின் மோதலால் அரசு அதிகாரிகள் வட்டம் இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. தலைமை செயலாளர் மனோஜ்பரிதா அமைச்சர்களின் பக்கம் உள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமை செயலாளர் கவர்னரை சந்திக்கவே இல்லை.

    அதோடு சில கோப்புகளைக்கூட கவர்னருக்கு அனுப்பப்படாமல் நேரடியாக முடிவெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுகடைகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், புதுவையை பொறுத்தவரை கலால்துறை மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

    உச்சநீதிமன்ற உத்தரவால் சுமார் 150-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இது அரசின் வருமானத்தை பாதித்துள்ளது. இதனால் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவையில் உள்ள 64.45 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை மாவட்ட சாலையாக அறிவிக்கும்படி மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இந்த கடிதம் கவர்னர் ஒப்புதல் பெறாமல் நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது விதிமுறையை மீறிய செயல் என்று கவர்னர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அவர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நெடுஞ்சாலைகளை மறுவகைப்படுத்துதல் தொடர்பான முக்கிய கொள்கை முடிவு எடுத்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதும்போது யூனியன் பிரதேச நிர்வாகியான எனக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அதை மீறி முதல்வர் செயல்பட்டுள்ளார்.

    துறை செயலர் இக் கோப்பை கவர்னர் பார்வைக்கு என குறிப்பு எழுதியும் அதை முதல்வர் ஒதுக்கியுள்ளார். மத்திய அரசுடன் முக்கிய கொள்கை முடிவுகள் தொடர்பாக தகவல் பரிமாற்றம் நடந்தால் கவர்னருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பது பணி விதியாகும். ஆனால் அதை மீறி முதல்வர் செயல்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கடும் மோதல் இருந்தும் இதுவரை கவர்னர் நேரடியாக முதல்- அமைச்சரை குற்றம்சாட்டியதில்லை. தற்போது நேரடியாக நாராயணசாமியை விதியை மீறியுள்ளதாக கவர்னர் குற்றம் சாட்டியுள்ளார்.

    Next Story
    ×