search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனை பெற தொலைபேசி உதவி எண் விரைவில் அறிமுகம்: வெங்கையா நாயுடு
    X

    24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனை பெற தொலைபேசி உதவி எண் விரைவில் அறிமுகம்: வெங்கையா நாயுடு

    தேசிய அளவில் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனை பெற தொலைபேசி உதவி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.
    சென்னை:

    சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்ற உமா ரவிசங்கருக்கு 5 தங்க பதக்கங்களை வழங்கினார். மேலும் 13 பேருக்கு அவர் தங்க பதக்கங்களை அளித்தார்.

    பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தலைமை தாங்கி மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், பிசியோதெரபி, பொது சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் 365 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

    பின்னர் விழாவில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    கிராமப்புற மக்கள் சிறப்பு டாக்டர்களை அணுக ஏதுவாக நாடு முழுவதும் தொலைதொடர்பு மருத்துவ மையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. மேலும் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளை இணைத்து முன்பதிவு மற்றும் மருத்துவ சிகிச்சை பெற திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.



    இதன் மூலம் அரசு மருத்துவமனைகளின் புற நோயாளிகள் மருத்துவ ஆய்வு அறிக்கைகள், தேவையான ரத்தம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இணையதளம் மூலம் கிடைக்கும். மேலும் 24 மணி நேரமும் டாக்டரை அழைத்து மருத்துவ சிகிச்சை பற்றிய ஆலோசனையை கேட்பதற்கு வசதியாக தொலைபேசி உதவி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    நம் நாட்டில் 1,668 பேருக்கு ஒரு டாக்டர் வீதம் உள்ளனர். இது போதாது. ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக 2022-ம் ஆண்டுக்குள் மேலும் 187 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வர நிதி ஆயோக் அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.

    எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்கும் 51 சதவீத மாணவிகள், மேற்படிப்பு மற்றும் மருத்துவ பயிற்சியில் அவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. டாக்டர்கள் ஆராய்ச்சி செய்து புது புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.



    தேசிய சுகாதார கொள்கைப்படி யோகா அவசியம். யோகா மதசார்பற்றது. உடல் வலிமைக்கு உகந்தது. அது ஒரு வகையான உடற்பயிற்சி. எனவே அனைத்து மக்களும் முடிந்தவரை யோகா பயிற்சி எடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி வரவேற்றார். ஆய்வுத்துறை தலைவர் டாக்டர் எஸ்.பி.தியாகராஜன், டீன்கள் டாக்டர் கே.வி.சோமசுந்தரம், டாக்டர் பி.வி.விஜயராகவன், மருத்துவ கல்லூரி டாக்டர் எஸ்.ஆனந்தன், தேர்வு கட்டுப்பாட்டு தலைவர் டாக்டர் டி.பிரதீபா, பதிவாளர் என்.நடராஜன், இருதய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எஸ்.தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்துக்கு நிரந்தர கவர்னர் விரைவில் நியமிக்கப்படுவார். தாய்மொழியை போற்ற வேண்டும். தாய் மொழியில்தான் படிக்கவேண்டும். இந்தி திணிக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எந்த நிலையோ அதே நிலையில்தான் இந்தி மொழி நரேந்திர மோடி ஆட்சியிலும் உள்ளது. இந்திமொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இல்லை. தாய் மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்றால் நல்லது என்றார்.

    Next Story
    ×