search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்: தினகரனிடம் 2-வது நாளாக டெல்லி போலீசார் விசாரணை
    X

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம்: தினகரனிடம் 2-வது நாளாக டெல்லி போலீசார் விசாரணை

    இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் டெல்லி போலீசார் இன்று 2-வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இது தொடர்பாக பிரபல மோசடி மன்னன் சுகேஷ் டெல்லியில் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், சென்னை வந்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அளித்தனர்.

    இதனை ஏற்று டெல்லியில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் தினகரன் நேற்று மாலை 3 மணி அளவில் ஆஜரானார். இதனை தொடர்ந்து கமி‌ஷனர் அலுவலகம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது வக்கீல்கள் பரமசிவம், வஜ்ரவேல் ஆகியோர் மட்டுமே கமி‌ஷனர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கேமராமேன்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.

    கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் உள்புறமாக மூடப்பட்ட ஒரு அறையில் டி.டி.வி.தினகரனும், அவரது உதவியாளர் ஜனார்த்தனனும் அமரவைக்கப்பட்டனர். துணை கமி‌ஷனர் சஞ்சய்செகாவத், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரேந்திரதோமர், நரேந்திர ஷெகல், ரித்தேஷ் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர்.

    சுகேஷ் அளித்த தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து வைத்திருந்த போலீசார் அது தொடர்பாக தினகரனிடம் கேட்பதற்காக 15-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தனர்.

    இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சுகேசை எப்படி அணுகினீர்கள்? இதற்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் யார்-யார்? என்பது போன்ற கேள்விகள் அதன் முதன்மையானதாக இடம் பெற்றிருந்தன.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக சுகேஷ் கூறி இருக்கிறார். இதற்கான பணப்பட்டுவாடா நடந்தது எப்படி? என்பது போன்ற கேள்விகளும் பிரதானமாக இடம் பெற்றிருந்தன.

    போலீசாரின் கேள்விகளுக்கு தினகரன் நிதானமாக பதில் அளித்தார். சுகேஷ் யார் என்றே எனக்கு தெரியாது? என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசாரிடமும் அதனையே தெரிவித்துள்ளார். இருப்பினும் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 3 மணிக்கு தொடங்கிய முதல் நாள் விசாரணை இரவு 10 மணி அளவிலேயே முடிந்தது. நேற்றைய விசாரணைக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் டெல்லியிலேயே தங்கினார்.



    இன்று 2-வது நாளாக அவரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது. இதற்காக தினகரன் இன்று பிற்பகலில் டெல்லி போலீசார் முன்பு ஆஜரானார். நேற்றைய கேள்விகளின் தொடர்ச்சியாக மேலும் பல கேள்விகளுடன் குற்றப்பிரிவு போலீசார் தயாராக உள்ளனர். சுகேசுடன் தொடர்பு குறித்த உண்மை தகவல்களை திரட்டுவதற்காக தினகரனின் செல்போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், அ.தி.மு.க. தலைமை பொறுப்புக்கு வந்த டி.டி.வி.தினகரன் அதன் பின்னர் யார்-யாரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். முதல் நாள் விசாரணையில் செல்போன் தொடர்புகள் பற்றி டெல்லி போலீசாரால் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. இதனால் 2-வது நாளான இன்றைய விசாரணையின் போதும் சரமாரியாக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    டி.டி.வி.தினகரனும் அவரது உதவியாளர் ஜனார்த்தனனும் வாட்ஸ்- அப் மூலமாக யார்-யாரிட மெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களது இ-மெயில் தொடர்புகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதே போல டெல்லியில் தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    இரட்டை இலை சின்னத்துக்கு சுகேஷ் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 10 பேர் இடைத்தரகர்கள் போல செயல்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றும் இந்நாள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் சிலர் உடைந்தையாக இருந்திருக்கலாம் என்றும் டெல்லி போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதன் அடிப்படையிலேயே அடுத்தகட்ட விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். டி.டி.வி.தினகரனிடம் நடத்தப்படும் விசாரணை முடிந்த பின்னர் இந்த விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் தினகரனிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையால் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதன் முடிவில் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தினகரன் மீதான பிடி இறுகி உள்ளது.
    Next Story
    ×