search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏப். 25 ந்தேதி கடைகள் அடைக்கப்படும்: முழு அடைப்புக்கு வணிகர்கள் ஆதரவு
    X

    ஏப். 25 ந்தேதி கடைகள் அடைக்கப்படும்: முழு அடைப்புக்கு வணிகர்கள் ஆதரவு

    நாளை மறுநாள் நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகள்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

    விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடக்கும் இந்த போராட்டம் இன்று 40-வது நாளை எட்டியுள்ளது.

    பிச்சை எடுத்து போராட்டம், சேலை அணிந்து போராட்டம் என பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்திய விவசாயிகள், உச்சக்கட்டமாக தங்களது ஆடைகளை களைந்து நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    பிரதமரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை அவர்களால் சந்திக்க முடியவில்லை. இதனால் போராட்டம் நீடிக்கிறது.

    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினும் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார்.

    அப்போது விவசாயிகள் பிரச்சினைக்காக தமிழக கட்சிகளை ஒருங்கிணைத்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன்படி தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கலந்து கொண்டன.

    இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைக்காக வருகிற 25-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர் பாக அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்ற பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    நாளை மறுநாள் நடக்கும் முழு அடைப்புக்கு தமிழகத்தில் பெரும்பாலான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.

    அன்று அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சினிமா காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

    முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆரம்பத்தில் வணிகர் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்க பேரமைப்பு, வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன.


    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி விக்கிரமராஜா, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். தங்களது அமைப்பு முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் என்றும் 21 லட்சம் கடைகள் அன்று அடைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையனும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வெள்ளையன் இன்று வெளியிட்டார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், 25-ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்களின் பேரவை அதரவு அளிக்கிறது. மே 5-ந்தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு அன்று கடைகள் அடைக்கப்படும் என்பதால் முதலில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை.

    மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று எங்களது முடிவை மாற்றி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்றார்.

    இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை என்பதாலும், தமிழக மக்களின் உரிமையை மீட்கவும் இப்போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். இதனால் 25-ந்தேதி தமிழகம் முழுவதும் 65 லட்சம் கடைகள் அடைக்கப்படும்.

    அன்று மாவட்ட தலை நகரங்களில் விவசாயி களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வெள்ளையன் தெரிவித்தார்.

    முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த போக்குவரத்து தொழிற் சங்கத்தினரும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    இது தொடர்பாக தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., வ.எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்., எப்.டி.டபிள்யூ. ஆகிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

    இதுதொடர்பாக இன்று இவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் முழு அடைப்பில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த தொழிற்சங்கங்களில் டிரைவர்- ஓட்டுனர்கள் இடம் பெற்றிருப்பதால் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    25-ந்தேதி அன்று இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த டிரைவர்கள் பஸ்களை ஓட்ட மறுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் இந்த போராட்டத்துக்கு வணிகர்கள் முழு அளவில் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் சென்னையின் முக்கிய வணிக வளாகமான கோயம்பேடு மார்க்கெட்டும் அன்று மூடப்படுகிறது.

    தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதால் தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகங்களிலும் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முழு அடைப்பு போராட்டத்தில் பா.ஜனதா, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. முழு அடைப்பில் பங்கேற்காததால் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த முழு அடைப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதிலும் போலீசார் கவனமுடன் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

    Next Story
    ×