search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே பஸ் மோதி விபத்து: என்ஜினீயர் உட்பட 3 பேர் பலி
    X

    ஓட்டப்பிடாரம் அருகே பஸ் மோதி விபத்து: என்ஜினீயர் உட்பட 3 பேர் பலி

    ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் என்ஜினீயர் உட்பட 3 பேர் பலியாயினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம் இவருடைய மகன் வைரமுத்து (வயது 24). லாரி டிரைவர். இவருடைய உறவினர் மணிகண்டன் (25). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் குறுக்குசாலையை அடுத்த சந்திரகிரிக்கு சென்றுள்ளனர்.

    பின்னர் அவர்கள் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவதற்காக தயாரானார்கள். அப்போது வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம் (60), தன்னையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லுமாறு வைரமுத்து, மணிகண்டன் ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகத்தையும் ஏற்றிக்கொண்டனர்.

    ஒட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வைரமுத்து, தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக வைரமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வைரமுத்துவும், ஆறுமுகமும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள், படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


    இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விபத்தில் பலியான வைரமுத்து மற்றும் ஆறுமுகத்தின், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு பஸ் டிரைவரான தேனி மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணபிரபுவை கைது செய்தனர். விபத்தில் பலியான வைரமுத்துவிற்கு திருமணமாகி சின்னமணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்தில் சிக்கிய 3 பேரும் பலியானதால் எப்போதும்வென்றான், வெள்ளாரம் கிராம மக்கள் சோகத்தில் முழ்கினர்.

    பலியான மணிகண்டன் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக விசாவுக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×