search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குமாறு  கூற ஓ.பி.எஸ்.சுக்கு தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்
    X

    அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குமாறு கூற ஓ.பி.எஸ்.சுக்கு தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

    அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்குமாறு கூற ஓ.பன்னீர் செல்வத்துக்கு தகுதி இல்லை என நாஞ்சில் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- அ.தி.மு.க. இரு அணிகளும் இணைவதற்கு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை ஏற்பட்டு விட்டதே?

    பதில்:- ஆமாம் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறாது.

    கே:- ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும், சசிகலா, டி.டி.வி. தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறாரே?

    ப:- எங்களுக்கு நிபந்தனை விதிக்க இவர் யார்? கட்சி, ஆட்சி எங்கள் பக்கம் இருக்கிறது. தொண்டர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். எங்களுக்கு அவர் நிபந்தனை விதிக்க தேவையில்லை.

    பாரதிய ஜனதாவின் கைக்கூலியாக ஓ.பன்னீர் செல்வம் செயல்படுகிறார். அதனால் அவரது அணியினர் நிபந்தனை விதிக்கிறார்கள். நாங்கள் இவர்களை கண்டு கொள்ளவில்லை.


    கே:- ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்களே?

    ப:- புரட்சித்தலைவி அம்மா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்திலும், அவர் மரணம் அடைந்த நேரத்திலும் ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்-அமைச்சராக இருந்தார்.

    அப்போது அவர் ஏன் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை. வாய்மூடி மவுனியாக இருந்தது ஏன்? அம்மா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை.

    பதவி இருந்தால் ஒரு பேச்சு, பதவி இல்லாவிட்டால் ஒரு பேச்சா?

    அ.தி.மு.க. பொதுக்குழுவால் நியமிக்கப்பட்டவர் சசிகலா. அவரை நீக்க சொல்ல பன்னீர் செல்வத்துக்கு எந்த யோக்கியதையும் இல்லை. சசிகலாவின் காலில் விழுந்தவர்தான் இந்த ஓ.பி.எஸ்.

    டி.டி.வி.தினகரன் பற்றியும், ஓ.பன்னீர் செல்வம் அணியினர் விமர்சிக்கின்றனர். டி.டி.வி. தினகரன் தமிழகத்தின் தலைவராக மீண்டும் விசுவரூபம் எடுப்பார். இது தவிர்க்க முடியா தது.

    டி.டி.வி. தினகரன் ஒரு மகத்தான தலைவர். அவர் இல்லாத அ.தி.மு.க. நிலவு இல்லாத நீல வானம்.

    எனவே அவரே தலைமை தாங்கி ஆட்சி அமைக்கும் காலம் விரைவில் வரும்.

    கே:- கட்சியை வலுப்படுத்த ஓ.பன்னீர் செல்வம் அணியினரின் ஆதரவு உங்களுக்கு தேவையில்லையா?

    ப:- எங்களுக்கு நிபந்தனை விதித்து, வருவார்களேயானால் அவர்கள் ஆதரவு எங்களுக்கு தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×