search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலா தலமானது - வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்
    X

    கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலா தலமானது - வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம்

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலாதலமானது. இன்று முதல், வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம். நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
    சென்னை:

    சென்னை கிண்டி கவர்னர் மாளிகை சுற்றுலாதலமானது. இன்று முதல், வாரத்தில் 3 நாட்கள் பொதுமக்கள் பார்வையிடலாம். நாள் ஒன்றுக்கு 20 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

    சென்னை கிண்டியில் 156.4 ஏக்கர் பரப்பளவில் கவர்னர் மாளிகை அமைந்துள்ளது. செம்மரம், சந்தன மரம், நாவல் மரம் என 6 ஆயிரத்து 718 மரங்களுடனும், 3.5 ஏக்கர் பரபரப்பளவில் காய்கறி தோட்டங்களுடனும் பசுமை நிறைந்து காணப்படுகிறது.

    698 புள்ளிமான்களும், 254 கலைமான்களும் உலா வருகின்றன. குரங்குகளும் அதிகளவில் வசிக்கின்றன. 25 வகையான 80-க்கும் மேற்பட்ட பறவைகளும் கூடு கட்டி வாழ்கின்றன.

    செயற்கை நீரூற்றுகள், வாத்துகள் நீந்தும் குளங்கள், வண்ண வண்ண பூக்களால் நிறைந்த தோட்டம் என குட்டி ஊட்டியை போல் கவர்னர் மாளிகை வளாகம் அமைந்துள்ளது.

    கவர்னர் மாளிகை வழியாக கடந்து செல்லும் அனைவரது மனதிலும், கவர்னர் மாளிகைக்குள் என்றாவது ஒரு நாள் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுவது வழக்கம். மக்களின் நீண்ட நாள் ஆசையை தற்போதைய தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் நிறைவேற்றி தந்துள்ளார்.

    வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை 2 மணி நேரம் கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று கிண்டி கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.

    அதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் கவர்னர் மாளிகையில் உள்ள வாத்து குளம், மூலிகை தோட்டம், தர்பார் அரங்கம், கவர்னர் மாளிகையின் முகப்பு தோற்ற அரங்கம் உள்பட 13 இடங்களை சுற்றிப்பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்காக www.tnr-a-j-b-h-av-an.gov.in என்ற கவர்னர் மாளிகை இணையதளத்தில் முதலில் முன்பதிவு செய்த 20 பேர் அனுமதிக்கப்பட உள்ளனர். அடுத்தடுத்து நாட்களில் முன்பதிவு செய்த 20 நபர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையின் வழிகாட்டிகள் கவர்னர் மாளிகையின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கம் அளிப்பார்கள்.

    கவர்னர் மாளிகையை மக்கள் சுற்றிப் பார்க்க வசதியாக 12 பேர் பயணிக்க கூடிய வகையில் 6 பேட்டரி கார்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கவர்னர் மாளிகைக்கு வழங்கி உள்ளது. நேற்று அந்த பேட்டரி வாகனத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, ஆணையர் பழனிசாமி உள்பட அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்த்தனர்.

    கவர்னர் மளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி பெறுவது எப்படி? என்பது குறித்து கவர்னர் மாளிகையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ கவர்னர் மாளிகையின் இணையதளத்தில் ஒரு நபருக்கு ரூ.25 கட்டணம் ஆன்-லைன் மூலம் செலுத்தி பெயரை பதிவு செய்ய வேண்டும். இதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் சுற்றிப் பார்ப்பதற்கு ஒதுக்கப்படும் தேதி விவரம் செல்போன் எண்ணிற்கு குறுந் தகவல் மூலமாக அனுப்பப் படும்.’ என்றார்.

    கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்க்க வருவோர்கள் செல்போன், கேமராவுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கவர்னர் மாளிகை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×