search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடையை இடித்து தள்ளிய பெண்கள்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுக்கடையை இடித்து தள்ளிய பெண்கள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே புதியதாக கட்டிய மதுக்கடையை பெண்கள் இடித்து தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பூதண்டலம், சக்தி நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டப்பட்டது. இதில் இன்னும் 2 நாட்களில் மதுக்கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கடப்பாரை, சுத்தியலால் புதியதாக கட்டப்பட்ட மதுக்கடை கட்டிடத்தை இடித்து தள்ளினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் - குன்றத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சிலம்பரசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடை குறித்து அகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேப்பம்பட்டை அடுத்த அயத்தூரில் டாஸ்மாக் கடை திறக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயத்தூர், சிறுகளத்தூர், தொட்டிகலை, கோயம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கு மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் மதுக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவள்ளூர்-பாக்கம் சாலையில் மறியல் செய்தனர்.

    செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, “கடந்த வாரம் இதே பகுதியில் மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் மதுக்கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

    ஆனால் தற்போது மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறக்க பணிகள் நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் தடுத்து நிறத்த வேண்டும். அதுவரையில் நாங்கள் போராடுவோம்” என்றனர்
    Next Story
    ×