search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு நீதிபதி எச்சரிக்கை
    X

    அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு நீதிபதி எச்சரிக்கை

    அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். விசாரணைக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.” என்று தெரிவித்தார்.
    சென்னை:

    அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி. தினகரன் கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள “பார்க் லேங்” வங்கிகளில் சட்ட விரோதமாக கோடிக் கணக்கில் பணம் முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

    வெளிநாட்டு வங்கிகளில் அவர் மேற்கொண்ட பணப்பரிமாற்றம் அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த இரு வழக்குகளின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் மலர்மதி முன்பு நடந்து வருகிறது.

    இந்த இரு வழக்குகளில் ஒரு வழக்கு விசாரணை நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்காக டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜரானார். அவர் மீதான அன்னிய செலாவணி மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    பிறகு அந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே மாதம் 10-ந்தேதி நடைபெறும் என்று தள்ளி வைக்கப்பட்டது. மற்றொரு அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று மாஜிஸ்திரேட் மலர்மதி கூறி இருந்தார்.

    இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் கூறுகையில், “டி.டி.வி. தினகரனின் உறவினர் மகாதேவனின் மரணம் தொடர்பான சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தஞ்சைக்கு சென்றுள்ளார்” என்று கூறினார்.

    மேலும் அவர், “இந்த விசாரணையில் பங்கேற்பதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால் மாஜிஸ்திரேட் அதை ஏற்கவில்லை.

    மாஜிஸ்திரேட் கூறுகையில், “அன்னிய செலாவணி மோசடி வழக்கில் உரிய முறையில் ஆஜராக வேண்டும். இதுதான் கடைசி வாய்ப்பு. அடுத்த தடவை இந்த வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.” என்று எச்சரித்தார்.

    பிறகு அவர் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.



    அதன் பிறகு சசிகலா மனு மீதான விசாரணை நடந்தது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, “எழும்பூர் கோர்ட்டில் நடக்கும் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது அவர் வக்கீல் கூறுகையில், சசிகலாவுக்கு ஏற்கனவே முதுகு வலி உள்ளது. எனவே அவரால் பெங்களூரில் இருந்து சென்னைக்கு நீண்ட தொலைவிற்கு வாகனத்தில் வர இயலாது என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி கூறுகையில், சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை தொடர்பாக மே 4-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ்கரன் மே 4-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
    Next Story
    ×