search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் அம்மா உணவகங்களில் குடிநீர் தட்டுப்பாடு
    X

    சென்னையில் அம்மா உணவகங்களில் குடிநீர் தட்டுப்பாடு

    சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான உணவகங்களுக்கு மெட்ரோ குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.
    சென்னை:

    பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க லாரிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் 7000 நடைகள் தண்ணீர் சப்ளை செய்ய குடிநீர் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. ஆனாலும் குடிநீர் பிரச்சனை பல்வேறு இடங்களில் நீடித்து வருகிறது. அம்மா உணவகங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான உணவகங்களுக்கு மெட்ரோ குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.

    வார்தா புயலின் போது அம்மா உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சம்புகளுக்கு விநியோகிக்கப்பட்ட மெட்ரோ குடிநீர் நிறுத்தப்பட்டது. குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களும் சேதமடைந்ததால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் தினமும் 4000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    50 சதவீத அம்மா உணவகங்களில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டதால் வியாபாரமும் சரிந்துள்ளது. குடிநீர் இல்லாததால் உணவகங்களுக்கு வரக்கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

    இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர்கள் கூறும் போது, அம்மா உணவகங்களுக்கு குடிநீர் விநியோகம் போதுமான அளவு இல்லாததால் அருகில் உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். சமையல் செய்வதற்கும் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது என்றனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, 100-க்கும் மேலான அம்மா உணவகங்களுக்கு ஆள்துளை கிணறு மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு சில உணவகங்களில் குடிநீர் விநியோகம் குறைந்துள்ளது என்றார்.
    Next Story
    ×