search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரக்காணம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி - 6 பேர் படுகாயம்
    X

    மரக்காணம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி - 6 பேர் படுகாயம்

    மரக்காணம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
    மரக்காணம்:

    புதுவையில் இருந்து இன்று காலை செங்கல் ஏற்றிய லாரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி சென்றது. லாரியை டிரைவர் பன்னீர்செல்வம் ஓட்டிச் சென்றார். லாரியின் மேல் காஞ்சீபுரம் நரையூரைச் சேர்ந்த சவுந்தர் (வயது 30) உள்பட 3 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தேன்பாக்கம் என்ற இடத்தில் இந்த லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கழிவுநீர் ஏற்றிய டேங்கர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இதில் கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி தாறுமாறாக ஓடி பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கியது. செங்கல் ஏற்றி வந்த லாரி அங்குள்ள மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரியில் வந்த தொழிலாளி சவுந்தர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் அந்த லாரியின் டிரைவர் பன்னீர்செல்வம் மற்றும் கூலி தொழிலாளர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோல் கழிவுநீர் டேங்கர் லாரியில் வந்த 3 பேரும் காயம் அடைந்தார்கள். விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் புதுவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தில் கழிவுநீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி தொங்கியபடி இருந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் தேன்பாக்கத்தில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தால் சென்னையில் இருந்து வரும் பஸ்கள் வெண்ணாங்குப்பட்டு, சூணாம்பேடு, ஆலத்தூர், கந்தாடு, மரக்காணம் வழியாக புதுவைக்கு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
    Next Story
    ×