search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காவிட்டால் மறியல்: விவசாய சங்க செயலாளர்
    X

    4 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்காவிட்டால் மறியல்: விவசாய சங்க செயலாளர்

    கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் மாவட்ட அளவில் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாய சங்க செயலாளர் கூறியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், காட்டு மன்னார்கோவில், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட 9 தாலுகா உள்ளது. இதில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடியை தவிர்த்து 6 தாலுகா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்தது.

    அதன் அடிப்படையில் 6 தாலுகாவில் மொத்தம் 76 ஆயிரம் விவசாயிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்து, அவர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.

    பின்னர் வருவாய்த்துறை ஊழியர்களும், வேளாண்மைத்துறை ஊழியர்களும் இணைந்து வறட்சி பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் விவசாயிகளிடம் வங்கி விவரம் வாங்கி கொண்டு, அதன் மூலம் பணம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் அனுப்பும் பணிகள் தீவிரமாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை செய்து வந்தது. இந்த நிலையில் 76 ஆயிரம் விவசாயிகளில் 4 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி பணம் வங்கி கணக்குகளில் செல்லவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்ட போது சரியான பதில் கூறவில்லை. வறட்சி பணம் விவசாயிகளுக்கு வராத காரணத்தால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டதோடு மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். குடும்பம் நடத்துவதற்கு கூட சரியான முறையில் பணம் இல்லாமல் இருந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியதாவது:-

    இன்றைய தினம் 4 ஆயிரம் விவசாயிகள் உரிய நிவாரணம் கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இது குறித்து மாவட்ட வேளாண்மை துறையினரும் உடனடியாக கவனித்து வறட்சி நிவாரணம் கிடைக்காத விவசாயிகளின் கணக்குகளை சரிபார்த்து நிவாரணம் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் மாவட்ட அளவில் விவசாயிகளை திரட்டி சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×