search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
    X

    புதுவையில் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடத்தியது போல், புதுவையிலும் தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த இன்று மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் புதுவையிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் தி.மு.க. தலைமையில் இன்று (திங்கட் கிழமை) மாலை நடக்கிறது.

    தி.மு.க. தெற்கு மாநில அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், படைப்பாளி மக்கள் கட்சி, ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய குடியரசு கட்சி, திராவிடர் கழகம் மற்றும் இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கூட்டத்தில் புதுவையில் மத்திய குழு வறட்சி தொடர்பாக ஆய்வு செய்தும் நிவாரணம் அளிக்காதது, டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், புதுவைக்கு கூடுதல் மத்திய நிதி, கடன் தள்ளுபடி, பொது கணக்கில் மீண்டும் புதுவையை இணைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

    அதோடு கவர்னர் கிரண்பேடி விவகாரம் குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×