search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: நாராயணசாமி
    X

    புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்: நாராயணசாமி

    புதுவையில் ஐகோர்ட்டு கிளை அமைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று பேட்டியில் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை பாரதியார் பல்கலைக்கூடத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அங்கு கலாச்சார மையம் கட்ட திட்டமிடப்பட்டது.

    தாகூர் கலைக்கூடம் என பெயர் சூட்டப்பட்டு ரூ.14.83 கோடியில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது.

    புதுவைக்கு வந்த அகில இந்திய வக்கீல்கள் சங்க தலைவர் ஆதிஸ்அகர்வால் என்னை சந்தித்தார். புதுவை மாநிலத்தில் ஐகோர்ட்டு கிளை கொண்டுவர நான் பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதா கொண்டு வந்து வலியுறுத்தினேன்.

    தற்போது புதுவை மாநிலத்தில் உள்ள 20 நீதிமன்றங்கள் உள்ளன. அதிகமாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. புதுவையை பொறுத்தவரை 33, 899 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சிறிய மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மேகலயா, சிக்கிம் ஆகியவற்றில் ஐகோர்ட்டு உள்ளது. குறைந்த அளவில் வழக்குகள் இருக்கும் மாநிலங்களில்கூட ஐகோர்ட்டு உள்ளது.

    அந்த மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஐகோர்ட்டு கிளை கேட்க புதுவைக்கு உரிமை உள்ளது. ஏற்கனவே புதுவையில் பிரெஞ்சு காலத்தில் உயர்நீதிமன்ற கிளை இருந்தது.

    எனவே, நமக்கு பாரம்பரியம் உள்ளது. புதுவை அரசு ஐகோர்ட்டு கிளை அமைக்க தயாராக உள்ளது.

    வரும் சட்டமன்ற கூட்டத்தில் ஐகோர்ட்டு கிளை அமைக்க தீர்மானம் நிறைவேற்றுவோம். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி கருத்து கேட்போம். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு இந்த கோரிக்கையை முன்வைப்போம். சட்ட வரையறை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். பிரதமர், சட்டத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்துவேன்.

    அம்பேத்கர் பிறந்தநாள் விழா, தமிழர் சித்திரை திருநாள், புனித வெள்ளி என 3 விழாக்களையும் புதுவை மாநிலத்தில் அரசு சார்பில் சிறப்பாக நடத்தியுள்ளோம். அம்பேத்கருக்கு சிலை அமைத்து, சட்டமன்றம் எதிரில் உள்ள அவர் சிலைக்கு குடை அமைத்து, மாநிலம் முழுவதும் வரவேற்பு வளைவுகள் அமைத்து கொண்டாடினோம். மக்கள் இதற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

    வருகிற மே 1ந்தேதி முதல் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனை மையங்களில் நாள்தோறும் விலை நிர்ணயம் என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் புதுவையை முதன்மையாக குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய அரசு திட்டத்தை நிறைவேற்றும்போது தான் புதுவை ஞாபகத்திற்கு வருகிறது.

    இது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இரவு 12 மணிக்கு விலை நிர்ணயிக்கப்படும். இது நடைமுறைக்கு உதவாது.


    ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணை நிறுவனங்களே 15 நாளைக்கு ஒருமுறை நிர்ணயிக்கின்றன. இப்படி நிர்ணயிக்கும்போது விலை அதிகரித்தால் அந்த தொகை பயனாளிகளிடம் பெறப்படுகிறது. விலை குறையும்போது கிடைக்கும் தொகை மத்திய அரசின் கணக்கிற்கு செல்கிறது. இப்படி ரூ.2 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த பயன் பயனாளிகளை சென்றடைய வேண்டும்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கை தவறானது. தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பது மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×