search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பத்தில் கோவில் விழாவில் காங்கிரஸ்- என்.ஆர். காங்கிரஸ் மோதல்
    X

    அரியாங்குப்பத்தில் கோவில் விழாவில் காங்கிரஸ்- என்.ஆர். காங்கிரஸ் மோதல்

    அரியாங்குப்பத்தில் கோவிலில் யாருக்கு முதல் மரியாதை அளிப்பது என்பதில் காங்கிரசாருக்கும், என்.ஆர். காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    பாகூர்:

    புதுவை அரியாங்குப்பத்தில் செடிலாடும் செங்கழுநீரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேரோட்டம் இன்று காலை நடந்தது. முன்னதாக தேரோட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி விழாவில் பங்கேற்க மணவெளி தொகுதி எம்.எல்.ஏ. அனந்தராமன் மற்றும் முன்னாள் சபாநாயகர் சபாபதி ஆகியோர் தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பே வந்திருந்தனர். ஆனால் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்தி விழாவில் பங்கேற்க காலதாமதமானது. இதனால் கோவில் நிர்வாகிகள் தேரோட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முன்னாள் சபாநாயகர் சபாபதிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கலாமா என யோசனை செய்தனர்.

    ஆனால் இதற்கு ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்களும், காங்கிரசாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொகுதி எம்.எல்.ஏ. தான் தேரோட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்றனர். அதற்கு என்.ஆர். காங்கிரசார் வயதில் மூத்தவரான சபாபதி உயர் பதவியான சபாநாயகர் பதவியில் இருந்துள்ளார்.

    எனவே அவருக்கு முதல் மரியாதை அளித்து பரிவட்டம் கட்டி தேரோட்டத்தை தொடங்கி வைக்கட்டும் என்று கூறினர். இதனை காங்கிரசார் ஏற்கவில்லை. இதனால் காங்கிரசாருக்கும், என்.ஆர். காங்கிரசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் தள்ளு-முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பும், பதட்டமும் உருவானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு வந்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதில் சுமூக முடிவு ஏற்பட்டது. தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு தான் முதல் மரியாதை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.

    இந்த சம்பவம் காரணமாக அரியாங்குப்பத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×