search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி அதிகாரிகளுக்கு மிரட்டல்: அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
    X

    வருமான வரி அதிகாரிகளுக்கு மிரட்டல்: அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

    வருமான வரி சோதனையின் போது, இடையூறுகளை செய்து பணி செய்ய விடாமல் தடுத்த அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தரான கீதாலட்சுமி ஆகியோரது வீட்டிலும் சோதனை நடந்தது.

    விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்த போது அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் ஆகியோர் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு விரைந்து சென்றனர். வருமானவரி சோதனை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் அவர்களை உள்ளே செல்வதற்கு அனுமதிக்கவில்லை.

    இதனையடுத்து 3 பேரும் பாதுகாப்பு படைவீரர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் சோதனை நடத்திக் கொண்டிருந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் பணியில் இடையூறு செய்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது பெண் அதிகாரி ஒருவர் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த நேரத்தில் தளவாய் சுந்தரம் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து சில ஆவணங்களை வெளியில் எடுத்து வந்தார். பின்னர் விஜயபாஸ்கரின் வீட்டு வேலையாள் ஒருவரிடம் அந்த ஆவணங்களை கொடுத்தார். இதனை வாங்கிய நபர் அதனை மறைத்து வைப்பதற்காக ஓட்டம் பிடித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய பாதுகாப்பு படையினர் ஓட்டம் பிடித்த வாலிபரை விரட்டிப் பிடித்தனர். அதற்குள் அந்த ஆவணங்களை விஜயபாஸ்கரின் கார் டிரைவர் உதயகுமார், காம்பவுண்டு சுவருக்கு வெளியில் வீசினார். அதனை எடுத்துக் கொண்டு ஒருவர் ஓடி விட்டார். அவர் போலீசில் சிக்கவில்லை. இப்படி வருமான வரி சோதனையின் போது, அமைச்சர்களும், விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களும் பல்வேறு இடையூறுகளை செய்தது அதிகாரிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இதன் பின்னரே, வருமான வரி சோதனையின் போது சிக்கிய பணப்பட்டுவாடா ஆவணங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இடைத்தேர்தலும் ரத்தானது.

    வருமான வரி சோதனையின் போது, இடையூறுகளை செய்து பணி செய்ய விடாமல் தடுத்த அமைச்சர்கள் மீது புகார் அளிப்பது தொடர்பாக வருமான வரி துறையினர் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து சென்னை வருமான வரி துறையின் புலனாய்வு பிரிவு இயக்குனர் முரளி, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனருக்கு கடிதம் மூலமாக புகார் மனுவை அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய போது, தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

    தளவாய் சுந்தரம் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெண் அதிகாரி ஒருவரை கடுமையாக மிரட்டினர். எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சரத்குமார் வீட்டில் சோதனை நடந்த போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.

    இது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அமைச்சர்களால் மிரட்டப்பட்ட பெண் அதிகாரி நேற்று மாலையில் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு அபிராமபுரம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியாகும். இதனால் வருமானவரி அதிகாரிகளின் புகார் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர். விஜயபாஸ்கரின் வீட்டில் உள்ள கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக வருமான வரி சோதனை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    Next Story
    ×