search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்
    X

    டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்

    டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
    சென்னை:

    நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புதிய மதுக்கடை களை திறக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய மதுக்கடைகள் திறப்பதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது.

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எம்.காளிப்பட்டி அடுத்த குக்கல்பட்டி காட்டுவளவு கிராமத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உள்ளே விடமறுத்ததால், கலெக்டர் அலுவலகம் முன்பு தாங்கள் தயாராக கொண்டு வந்த வாக்காளர் அடையாள அட்டை, ரே‌ஷன் கார்டு ஆகியவை தங்களுக்கு தேவையில்லை என ரோட்டில் போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், மதுவால் குடும்பமே சீரழிந்து வருகிறது. எனவே, நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடையை அகற்றி, எங்கள் கிராமத்தில் வைக்க அனுமதிக்க முடியாது. அப்படியே நீங்கள் மதுக்கடை கொண்டு வந்தால், நாங்கள் ஊரை காலி செய்து செல்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் வேண்டாம், ரே‌ஷன் கார்டும் வேண்டாம் என ஆவேசமாக தெரிவித்தனர்.

    பின்னர் ஒருவழியாக 4 பேரை மட்டும் கோரிக்கை மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

    கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் சாலையோரம் இயங்கி வந்த மதுக்கடைகள் அகற்றப்பட்டதால், செட்டி குறிச்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    குடிமகன்களின் ரகளையால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், செட்டிக்குறிச்சியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி இக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை இங்கு வந்த மர்ம நபர்கள், இந்த டாஸ்மாக் கடையின் பின்பக்கம் உள்ள ஜன்னலில் உள்ள ஓட்டை வழியாக பெட்ரோல் ஊற்றி கடைக்கு தீவைத்து விட்டு தப்பி விட்டனர். தீ மளமளவென பரவியதால் கடையின் ஒரு பகுதியில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் வெடித்து சிதறின.

    திண்டுக்கல்-கரூர் சாலை ஓடைப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    நேற்று கடை திறக்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வந்ததால் ஓடைப்பட்டி மற்றும் பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடையை திறக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசார் சமரசம் செய்தும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது 2 பெண்கள் தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர்.

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அண்ணாமலை அள்ளி ஊராட்சியில் பஸ் நிறுத்தத்தில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பாலக்கோடு- காவேரிப்பட்டணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பஸ் நிறுத்தத்தில் பயணியற் நிழற்கூடம் அருகே டாஸ்மாக் கடையை திறப்பதால் குடிமகன்களின் அட்டகாசம் அதிகமாக இருக்கும் என மாணவ, மாணவிகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைக்கு அப்பால் 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடைக்கு அதன் பணியாளர்கள் இடம் தேடி வருகின்றனர்.

    ஆலங்குளத்தில் நெட்டூர் சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் கடையை அதே இடத்தில் வெறும் 10 மீட்டர் தொலைவில் அமைக்க இடத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கியுள்ளார் எனவும், அங்கு மட்டுமல்ல ஆலங்குளம் பேரூராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடை எங்கும் அமைக்க கூடாது என கூறி கடந்த 7-ந்தேதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக கிளம்பி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலங்குளம் பேரூராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பின்னர் இதனை வலியுறுத்தி தாசில்தார் சுப்புராயலுவிடம் போராட்ட குழுவினர் மனு அளித்தனர்.

    திருப்பத்தூர் சின்ன பேராம்பட்டு ஆத்துமேடு பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் நேற்று மதுக்கடை திறக்கப்பட்டது. இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

    அவர்கள் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.வுக்கு (தி.மு.க.) தகவல் கொடுத்தனர். அவர் தனது ஆதரவாளர்களுடன் அந்த கடைக்கு வந்தார். அவரது முன்னிலையில் குரும்பேரி, பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கினர்.

    சோளிங்கரில் 4 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டதால், சோளிங்கர் அருகே கீழ்யாண்டைமோட்டூரில் ஒரே இடத்தில் 2 புதிய கடைகள் கட்டி திறக்கப்பட்டது. இந்த கடைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்களை இறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாடைக்கட்டி அதில் காலி மதுபாட்டில்களை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

    கலவை பஜார் பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த கடை கலவை - சென்னசமுத்திரம் சாலையில் அப்பாதுரைபேட்டை பகுதியில் திறக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் கடை திறந்தவுடன் வடக்கு மாவட்ட பா.ம.க. தலைவர் ஆறுமுகம் உள்பட நிர்வாகிகள், பொதுமக்கள் கடையின் முன்பாக திரண்டு கடையை அகற்றக்கோரி கோ‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பா.ம.க. இளைஞர் அணி நிர்வாகி காரீசன் என்பவர் திடீரென கையில் கட்சி கொடியுடன் டாஸ்மாக் கடை அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோ‌ஷமிட்டார்.

    ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு ஊராட்சி எல்லையில் ராணிப்பேட்டை - தெங்கால் சாலையில் புதிதாக மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புளியங்கண்ணு, அவரக்கரை, தெங்கால், மணியம்பட்டு உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், திறக்கப்பட்ட மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர் ஓட்டேரி சாமி நகரில் புதியதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க தீவிர ஏற்பாடு செய்துள்ளனர். இந்த இடம் அரசு கலைக்கல்லூரி மைதானத்துக்கு அருகில் உள்ளது.

    மேலும் இந்த பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இதனால் மதுக்கடைக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு மதுக்கடை வந்தால் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்ணுக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் ஓட்டேரி மெயின் ரோட்டில் ஓட்டேரி சாலை மறியல் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த கரியமங்கம், மதுரா, அம்மனூர், தண்டராம்பட்டு அடுத்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் புதிதாக டாஸ்மாக் கடையை எங்கள் பகுதியில் திறக்க கூடாது என்று கலெக்டரிடம் மனு அளிக்க திரண்டு வந்தனர்.

    அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் குருந்தினி கிராம மக்கள் அங்குள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி நின்று திடீரென்று போராட்டம் நடத்தினர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.

    இதையடுத்து கோ.பொன்னேரி பகுதியில் நள்ளிரவில் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நள்ளிரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்தனர். டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.

    அவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளை பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை தொடங்குவதற்கு அதிகாரிகள் முயற்சி செய்வதை அறிந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு 3-வது நாளாக தொடர் போராட்டம் நீடிக்கிறது.

    ராஜாக்கமங்கலத்தை அடுத்த காக்காத்தோப்பிலும் புதிய டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. அங்குள்ள மக்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலையை அடுத்த கீழக்கல்குறிச்சியிலும் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் டாஸ்மாக் கடையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×