search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் கடிதம்
    X

    சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் கடிதம்

    புதுச்சேரியில் நகராட்சி ஆணையாளர் மாற்றல் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு கவர்னர் கிரண்பேடி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
    புதுச்சேரி:

    இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 30-ந்தேதி புதுவை சட்டசபை கூடியது. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் மீது உரிமை மீறல் புகார் எழுப்பி பேசினர். இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் ஆணையாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார்.

    இந்த விவகாரம் கவர்னர், அமைச்சரவை இடையிலான பனிப்போரை வெளிப்படையான மோதலாக மாற்றியது. இதை கவர்னர் கிரண்பேடி அமைச்சரவையை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். தன் அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லாது என்று கூறி கவர்னர் மாற்றல் உத்தரவை ரத்து செய்தார். மீண்டும் சந்திரசேகரனையே நகராட்சி ஆணையாளராக செயல்பட அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பான கடிதத்தில் கவர்னரின் செயலர் தேவநீதிதாஸ் கையெழுத்திட்டிருந்தார். இந்த கடிதத்தை சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு கவர்னர் அனுப்பியிருந்தார். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் கவர்னர் கையெழுத்து இல்லாததால் அந்த கடிதத்தை திருப்பி அனுப்பினார்.

    கடந்த 3-ந்தேதி சபாநாயகர் உத்தரவுப்படி பொறுப்பு ஆணையாளரான கணேசன் பணிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சந்திரசேகரன் கவர்னர் உத்தரவை காண்பித்து தானே ஆணையாளராக நீடிப்பதாகக்கூறி இருக்கையில் அமர்ந்து பணியை தொடர்ந்தார்.

    இதுதொடர்பாக கணேசன் தலைமை செயலாளரிடமும், நிர்வாக சீர்திருத்த துறையிடமும் தகவல் தெரிவித்தார். சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்தினார். சபாநாயகர் தீர்ப்பின்படி பணிக்கு சென்ற கணேசனுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யார் நடந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.க்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.ஜி.பி.யிடம் சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதனால் கணேசன் நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றார். டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் சபாநாயகரை சந்தித்து இதுதொடர்பாக விளக்கினார். ஆனால் எழுத்துப்பூர்வமாக தரும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். நேற்று டி.ஜி.பி. எழுத்துப்பூர்வமான அறிக்கையை சபாநாயகரிடம் தாக்கல் செய்தார். இருப்பினும் மேலும் சில விளக்கங்களை டி.ஜி.பி.யிடம் சபாநாயகர் கேட்டுள்ளதாக தெரிகிறது.



    இந்நிலையில் சபாநாயகர் வைத்திலிங்கத்திற்கு கவர்னர் கிரண்பேடி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் நகராட்சி ஆணையாளராக சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து கணேசனை நியமித்தது தொடர்பாக தாங்கள் பிறப்பித்துள்ள உத்தரவை மறு பரிசீலனை செய்து மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பேடி கையெழுத்தும் போட்டுள்ளார். இதை சபாநாயகர் பெற்றுக்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே சபாநாயகர் உத்தரவை மீறிய விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் சிவகொழுந்து தலைமையிலான உரிமை மீறல் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு முன்பு நேற்று மாலை சந்திரசேகரன் ஆஜரானார்.

    அப்போது அவரிடம் 11-ந்தேதிக்குள் புகார் குறித்து விளக்கம் அளிக்க குழு உத்தரவிட்டிருந்தது. சந்திரசேகரன் தன் விளக்கத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மேலும் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
    Next Story
    ×