search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாற புதுவை மக்கள் இறைவனை வேண்டிகொள்ளுங்கள்:  கந்தசாமி பேச்சு
    X

    கவர்னர் மாற புதுவை மக்கள் இறைவனை வேண்டிகொள்ளுங்கள்: கந்தசாமி பேச்சு

    கவர்னர் மாற புதுவை மக்கள் இறைவனை வேண்டிகொள்ளுங்கள் என்று அமைச்சர் கந்தசாமி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பேசினார்.

    திருக்கனூர்:

    திருக்கனூர் அருகே விங்காரெட்டி பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பான்கோஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சிவகங்கை வரவேற்றார்.

    அமைச்சர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    இப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள், மதில் சுவர் வசதி விரைவில் செய்து தரப்படும். இப்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை தீர்க்கப்படும். புதுவையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஏனெனில் அரசிடம் நிதிஇல்லை.

    கடந்தகால அரசு எந்த துறையின் பணத்தையும் எடுத்து திட்டத்துக்கு பயன்படுத்தினர். அதற்கு அப்போதய கவர்னர்கள் ஒத்துழைப்பும் அளித்தனர். ஆனால் இப்போதைய கவர்னர் பணத்தை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்த கூடாது என்கிறார். பிறகு பணம் இல்லாமல் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும்?

    தொழிலாளர் வைப்பு நிதியில் ரூ.36 கோடி முறைகேடு நடந்துள்ளதாக கவர்னர் கூறுகிறார். அந்த பணம் பாரதிமில் மற்றும் சுதேசிமில் தொழிலாளர்களுக்கு 1984-ம் ஆண்டுக்கு கட்ட வேண்டிய பணமாகும். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு கூட முழுமை அடையவில்லை. பழைய பாக்கியை கட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. ஆளுநரை கேட்கிறேன்... சர்க்கரை ஆலையை நேரடியாக ஆய்வு செய்து கரும்பு விவசாயிகளுக்கும், ஆலை தொழிலாளர்களுக்கும் சேர வேண்டிய தொகையை மத்திய பாரதீய ஜனதா அரசிடம் இருந்து கவர்னர் கிரண்பேடி நிதி பெற்று வந்து கொடுத்தால் அந்த நடவடிக்கையை பாராட்டலாம்

    பெரிய முறைகேட்டை கண்டுபிடித்து விட்டதாக கவர்னர் கூறுகிறார். பெரிய நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் கூட பணம் கட்ட வேண்டியது உள்ளது. புதுவை ஒரு சிறிய மாநிலமாகும். எம்.எல்.ஏ.க்களை அதிகாரிகள் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கவர்னர் கூறுகிறார். எம்.எல்.ஏ.க்கள் மக்கள் பிரதிநிதிகள். மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான். எம்.எல்.ஏ.க்களை அழைக்க வேண்டியது இல்லை என கூறியதற்கு சில கட்சிகளும் ஆதரித்து பேசுகின்றன. அத்தகைவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் தேவை இல்லையா?

    புதுவை மாநிலத்தில் வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த 10 மாதங்களாக தனிநபர் கூட முன்னேறவில்லை. இதற்கு புதுவையில் மாற்றம் வேண்டும். அதற்கு கவர்னர் மாற வேண்டும். கவர்னர் மாற வேண்டும் என்றால் புதுவை மக்கள் இறைவனை வேண்டி கொள்ளுங்கள். அனைத்து கட்சியினரும் கவர்னருக்கு எதிராக ஒன்றுசேர்ந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அனைத்து கட்சி கூட்டத்துக்கு வந்திருந்து எம்.எல்.ஏ.க்.களின் உரிமைக்காக குரல் கொடுத்த டி.பி.ஆர். செல்வம் எம்.எ.ல்.ஏ.வை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×