search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் வணிக வளாக கட்டிடத்துக்கு சீல்: கலெக்டர் நடவடிக்கை
    X

    பாளையில் வணிக வளாக கட்டிடத்துக்கு சீல்: கலெக்டர் நடவடிக்கை

    ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட அனுமதியை மீறி வேறுவடிவில் கட்டடம் கட்டியதால் பாளையில் உள்ள 6 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
    நெல்லை:

    பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் 6 மாடிகள் கொண்ட தனியார் வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதில் ஓட்டல், சூப்பர் மார்க்கெட், விடுதி அறைகள், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

    இந்தக்கட்டிடம் அனுமதி பெறப்பட்ட கட்டிட ஒப்புதலை மீறி கூடுதலாக வேறுவடிவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், உள்ளூர் நகர திட்டமைப்பு குழுமத்துக்கு பரிந்துரை செய்தார். இது குறித்து உள்ளூர் நகர திட்டக்குழு உதவி இயக்குனர் வேல்முருகன் கட்டிட உரிமையாளருக்கு கூடுதல் கட்டிடத்தை அகற்ற நோட்டீஸ் வழங்கினார்.

    ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் கூடுதல் கட்டிடத்தை அகற்றாததால், அந்த கட்டிடத்தை சீல் வைக்க கலெக்டர் கருணாகரன் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன், உள்ளூர் நகர திட்ட குழும உதவி இயக்குனர் வேல்முருகன், பாளை தாசில்தார் தங்கராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வந்தனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் முன்னிலையில் 6 மாடிகள் கொண்ட கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

    அப்போது கட்டிட உரிமையாளருக்கு ஆதரவாக பல வக்கீல்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அதிகாரிகள் ஒவ்வொரு தளமாக சென்று அனைத்து அறைகளில் உள்ள நபர்களையும் வெளியேற்றி விட்டு அனைத்து அறைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

    இதனால் அந்த கட்டிடத்தில் செயல்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்று செயல்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டிடத்தின் முன் போலீஸ் உதவி ஆணையர்கள் மாரிமுத்து, விஜயகுமார், இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒப்புதல் பெறப்பட்ட கட்டிட அனுமதியை மீறி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுபோல நெல்லையில் உள்ள பல கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.
    Next Story
    ×