search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவசர அழைப்பாக டெல்லி சென்ற கவர்னர் கிரண்பேடி புதுவை திரும்பினார்
    X

    அவசர அழைப்பாக டெல்லி சென்ற கவர்னர் கிரண்பேடி புதுவை திரும்பினார்

    புதுவை கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக டெல்லி வருமாறு அவசர அழைப்பு விடுத்ததால் டெல்லி சென்ற அவர் அங்கு யாரையும் சந்திக்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் நேற்று இரவு புதுவை திரும்பினார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.



    கவர்னரின் செயல்பாடு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் கவர்னருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்தது.

    இது புதுவை நகராட்சி ஆணையாளரை இடம் மாற்றிய விவகாரத்தில் வெளிப்படையாக வெடித்தது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கொண்டு வந்த உரிமை மீறல் விவகாரத்தின் போது நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.

    சபாநாயகர் வைத்திலிங்கத்தின் உத்தரவை ஏற்று தனது ஆதரவு அதிகாரியான நகராட்சி ஆணையாளரை தலைமை செயலாளர் மனோஜ் பரிஜா காத்திருப்போர் பட்டியலில் நியமித்தது கவர்னர் கிரண்பேடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன்னிடம் ஒப்புதல் பெறாமல் அதிகாரியை இடமாற்றம் செய்ய இயலாது என கவர்னர் கருத்து தெரிவித்ததோடு தலைமை செயலாளரின் உத்தரவை ரத்து செய்தார்.

    அதோடு தலைமை செயலாளரை உயர் பதவிகளில் அழுகிய முட்டை என டுவிட்டரில் கவர்னர் விமர்சனம் செய்தார். மேலும், புதுவை அமைச்சர்களையும், அரசியல் கட்சியினரையும் சுயநலவாதிகள் என குறிப்பிட்டார்.

    இதனால் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. காங்கிரஸ் தலைமையில் அனைத்து கட்சியினரும் ஒன்று கூடி கவர்னரின் செயல்பாடு குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரடியாக சந்தித்து புகார் செய்ய முடிவு செய்தனர்.

    இதற்கிடையே அரசின் பொதுத்துறை, கூட்டுறவு துறை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவர்னர் கிரண் பேடி குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவே கவர்னர் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார் என அமைச்சர் கந்தசாமி புகார் செய்தார்.

    மேலும் தொழிலாளர் வைப்பு நிதியை அரசு முறைகேடாக பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் சட்டத்துறை செயலாளரிடம் கருத்து கேட்டுள்ளார்.

    இந்த நிலையில் புதுவை கவர்னரை மத்திய அரசு உடனடியாக டெல்லி வருமாறு அவசர அழைப்பு விடுத்தது. அதன் பேரில் காரைக்காலில் சுற்றுப்பயணம் செய்து வந்த கவர்னர் பயணத்தை பாதியில் கைவிட்டு டெல்லி சென்றார்.

    டெல்லியில் 2 நாட்கள் முகாமிட்டு இருந்த கவர்னர் கிரண்பேடி யாரையும் சந்திக்கவில்லை. இந்த நிலையில் டெல்லியில் முகாமிட்டு இருந்த கவர்னர் கிரண்பேடி மீண்டும் நேற்று இரவு புதுவை திரும்பினார். இதனால் மோதலின் அடுத்த கட்டம் இன்று (திங்கட்கிழமை) வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×