search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுயநலவாதிகள் மிரட்டுகிறார்கள்: கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு
    X

    சுயநலவாதிகள் மிரட்டுகிறார்கள்: கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு

    நல்ல பணி செய்வதும், மாற்றத்தை கொண்டு வர சிந்தனை செய்வதும் சுயநலவாதிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால்தான் என்னை திரும்ப பெற வேண்டும் என்று மிரட்டும் நிலை ஏற்பட்டு உள்ளதாக கிரண்பேடி கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் பணிகளில் கவர்னர் கிரண்பேடி அதிகமாக தலையிட்டு வந்தார். புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று கூறி இவ்வாறு அவர் தலையிட்டார்.

    இதனால் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

    இந்த பிரச்சனையால் அரசு பணிகள் முடங்கின. பல்வேறு நலத்திட்ட பணிகளையும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே புதுவை நகராட்சி கமி‌ஷனர் சந்திரசேகரன் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாஸ்கர் சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தார். அந்த அதிகாரியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார்.

    அதன்படி அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டு புதிய அதிகாரியாக கணேசனை தலைமை செயலாளர் நியமித்தார்.

    ஆனால், இந்த உத்தரவை கவர்னர் கிரண்பேடி ரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் அமைச்சரவைக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. கவர்னரின் செயல்பாடுகளால் பல்வேறு அரசியல் சிக்கல்களும் எழுந்தன.

    இதையடுத்து தற்போதைய நிலைமை பற்றி ஆராய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. நேற்று நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க. தவிர, அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன.

    இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று கவர்னருக்கு எதிராக ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோரிடம் புகார் கூறுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-


    நல்ல பணி செய்வதும், மாற்றத்தை கொண்டு வர சிந்தனை செய்வதும் சுயநலவாதிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால்தான் என்னை திரும்ப பெற வேண்டும் (மாற்ற வேண்டும்), தடை செய்ய வேண்டும் என்று மிரட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கவர்னர் மேலும் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் ஒருபோதும் ரப்பர் ஸ்டாம்பு போல செயல்பட மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார்.

    கவர்னரின் இந்த விமர்சனம் புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×