search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரணாசி
    X
    வாரணாசி

    மாமல்லபுரத்தில் கற்பழிக்கப்பட்ட ஜெர்மனி பெண் வாரணாசி சென்றார்

    மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு புறப்பட்டு சென்றார்.
    மாமல்லபுரம்:

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜெனி என்கிற ஜெய்டினா (வயது 38) என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர் கடந்த 2-ந்தேதி காலையில் கடற்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை மர்ம நபர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கற்பழித்தனர்.

    இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜெய்டினா மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அந்த பெண் கூறிய அங்க அடையாளங்களை வைத்து கம்ப்யூட்டர் மூலம் வரை படம் உருவாக்கப்பட்டது. இந்த வரைபடம் வழக்கை விசாரித்து வரும் 4 தனிப்படை போலீசாருக்கும் வழங்கப்பட்டது.

    அந்த வரை படத்துடன் போலீசார் நேற்று மாமல்லபுரம் புதூர், எடையூர்குப்பம், தேவனேரி, சூளேரிகாடு, நெம்மேலி, புதுநெம்மேலி, புதுகல்பாக்கம் ஆகிய கடற்கரை மீனவ கிராமங்களுக்கு சென்றனர். அங்கு பொது மக்களிடம் வரைப்படத்தை காட்டி விசாரணை நடத்தினர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கு மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களுக்கு ஊர் கட்டுப்பாடு உள்ளது. அதை மீறி யாரும் தவறு செய்ய மாட்டார்கள். எனவே எங்கள் கிராமத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் கூறினார்கள்.

    ஆனாலும் போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் மாமல்லபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

    4 பேரையும் ஜெய்டினாவிடம் காட்டி அவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை அறிய போலீசார் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக ஜெய்டினாவை போலீசார் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர் சென்னையில் இருந்து வாரணாசி செல்ல திட்டமிட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றுவிட்டார். இதையடுத்து 4 பேரையும் போலீசார் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஜெய்டினா முன்பு அவர்களை நிறுத்தினார்கள். அவர்களை பார்த்த ஜெய்டினா அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று கூறிவிட்டார்.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே ஜென்டினாவும் வாரணாசி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ஜெர்மனி செல்ல திட்டமிட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்தால் அவரை மாமல்லபுரத்துக்கு கொண்டு வர தயாராக இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே மாமல்லபுரத்தில் விபசாரம் நடப்பாக சந்தேகப்படும் லாட்ஜுகளில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். மாமல்லபுரத்தில் உள்ள லாட்ஜுகளுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களின் பெயர் பட்டியலையும் போலீசார் கேட்டுள்ளனர். அவர்களில் யாருக்காவது இதில் தொடர்பு இருக்குமா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×