search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசுடன் மோதல் போக்கு: கிரண்பேடியை மாற்றும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்
    X

    புதுவை அரசுடன் மோதல் போக்கு: கிரண்பேடியை மாற்றும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

    புதுவையில் கவர்னர் மீதான அதிருப்தி காரணமாக அவரை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை விட கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது.

    இதை பயன்படுத்தி கவர்னர் கிரண்பேடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளிலும் தலையிட்டு வருகிறார். அதிகாரிகள் மாற்றம், பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற எந்த செயல்களையும் அரசால் தன்னிச்சையாக செய்ய முடியவில்லை.

    இதுமட்டுமல்ல, ஒவ்வொரு பகுதிக்கும் கவர்னரே நேரடியாக சென்று அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது, திட்டங்களை அவரே அறிவிப்பது போன்றவற்றையும் செய்து வருகிறார். அப்போது சம்மந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கும் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை.

    இதனால் அவர் மீது எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்தனர். புதுவை நகராட்சி கமி‌ஷனர் சந்திரசேகரன் கவர்னரின் உத்தரவுபடி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தெரியாமல் பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இதனால் அதிகாரி சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்கும்படி சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். அதை ஏற்று கமி‌ஷனர் சந்திரசேகரனை மாற்றிவிட்டு புதிய கமி‌ஷனராக கணேசனை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா நியமனம் செய்தார்.

    இந்த நியமனத்தை ரத்து செய்யும்படி கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். ஆனால் சபாநாயகர் உத்தரவை மீற முடியாது என்பதால் தலைமை செயலாளர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்.

    இந்த நிலையில் அரசுக்கு எதிரான கவர்னருடைய செயல்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்திருப்பதால் அவர் மீது ஜனாதிபதி, பிரதமரிடம் முறையிட எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே சட்டசபை கூட்டத்தின்போது கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள்.

    ஆனால் இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். கவர்னர் மீது சட்டசபையில் இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவது தவறானதாகும். எனவே இதையெல்லாம் செய்ய முடியாது என்று கூறினார். எனவே அந்த பிரச்சனை அதோடு முடிவுக்கு வந்தது.

    ஆனாலும் கவர்னர் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுத்துவதால் அவர் மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 3 கட்சிகளை சேர்ந்தவர்களும் புகார் அளிக்கின்றனர். எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் மட்டும் இதில் மவுனம் சாதித்து வருகிறது.


    3 கட்சி எம்.எல்.ஏ.க்களும் கவர்னர் மீது அதிருப்தி தெரிவித்து அவரை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் கடிதம் கொடுக்க உள்ளனர். அந்த கடிதத்தை அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளார்.

    அதன்பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×