search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா பற்றி விமர்சனம்: எச்.ராஜா உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்
    X

    சோனியா பற்றி விமர்சனம்: எச்.ராஜா உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து இன்று இளைஞர் காங்கிரசார் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.
    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். அவரது உருவபொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். பின்னர் விஜய் இளஞ்செழியன் நிருபர்களிடம் கூறியதாவது-

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக் குறைவாக விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளோம். சோனியா காந்தியை எச்.ராஜா தொடர்ந்து அவமதித்தால் அவருக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர்கள் விக்டரி ஜெயக்குமார், ஹசன் ஆரூண் மற்றும் டி.எம்.தணிகாசலம், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சி ராணி தலைமையில் பெண்கள் எச்.ராஜாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் பா.ஜனதா தலைவர்களை கண்டிக்கிறோம். எச்.ராஜா மன்னிப்பு கேட்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    பின்னர் எச்.ராஜா உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.

    போராட்டத்தில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராணி, ராஜேந்திரன், மைதிலி தேவி, மாவட்ட தலைவர் வனிதா, சரளாதேவி, கவுரி கோபால், வக்கீல் சுதா, ரஷீதாபேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவொற்றியூர் தேரடியில், பகுதி தலைவர்கள் அரவிந்த் ஆறுமுகம், தேசிய மணி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசார் எச்.ராஜா உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்து எரித்தனர். இதில் மணலி பகுதி தலைவர் ரமேஷ், சன்னசேக்காடு பகுதி தலைவர் தீர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-



    தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகிற பகீரத முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் எச். ராஜாவை போன்றவர்கள் ஆத்திரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகின்றனர். நேற்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்குவதற்கு வக்கற்ற நிலையில் பத்திரிகையாளர்களையே தேசத் துரோகிகள் என்று சாடியிருக்கிறார். தேவையில்லாமல் அன்னை சோனியா காந்தியை இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்திருக்கிறார்.

    இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக தமது உயிரையே தியாகம் செய்த இந்திராவின் அன்பு மருமகளான அன்னை சோனியாவின் தேசப்பற்று, விடுதலைக்காக துரும்பைக் கூட எடுத்துப் போடாத பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல, பயங்கரவாதத்திற்கு தமது கணவர் ராஜீவ்காந்தியை பலிகொடுத்தவர் சோனியா காந்தி. இத்தகைய அரும் பெரும் தியாகங்களை செய்த தியாகத் தலைவி அன்னை சோனியா காந்தியைப் பற்றி விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வில் எவருக்கும் அருகதையில்லை.

    லட்சோபலட்சம் தொண்டர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற அன்னை சோனியா காந்தியை இழிவான முறையில் பேசிய எச்.ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி அவர் தெரிவிக்க மறுத்தால் எச். ராஜாவை வீறு கொண்ட தமிழக தேசிய இளைஞர்கள் அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×