search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினாவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீசார்.
    X
    மெரினாவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள போலீசார்.

    கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 பேர் மீது வழக்கு

    மெரினாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 17 நாட்களாக நடக்கும் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் மெரினா கடற்கரையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். கடந்த 3 மாதங்களாக ‘ஷிப்டு’ முறையில் அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டனர். ஒவ்வொரு ஷிப்டிலும் 6 இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போலீசார் முயற்சி செய்த போது, அதனை எதிர்த்து மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அதே போல நேற்று பிற்பகலில் விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினாவில் கடலில் இறங்கி கோ‌ஷங்களை எழுப்பிய அவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இது தொடர்பாக லயோலாமணி என்பவர் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.



    இவர்கள் அனைவர் மீதும் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், போலீஸ் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

    பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மெரினாவில் இன்று கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு வரும் இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை பிடித்து விசாரணை நடத்துகிறார்கள்.

    விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தகவல் பரவியுள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரெயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த முறை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். ரெயில், பஸ்களில் புறப்பட்டு வந்த அவர்கள் சென்னையில் குவிந்து விட்டனர். அது போன்று சத்தமில்லாமல் சென்னையில் இளைஞர்கள் கூடி விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் கவனமுடன் செயல்பட தொடங்கி இருக்கிறார்கள். இதற்காக ரெயில் நிலையங்களில் சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.



    சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக திரண்டது போல இளைஞர்களும், மாணவர்களும் மீண்டும் கூடிவிடக்கூடாது என்பதில் போலீசார் உறுதியுடன் உள்ளனர். இதனால் சென்னை மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடந்த இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு வ.உ.சி.பூங்காவில் 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் 3 நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டன.

    வ.உ.சி.பூங்காவிற்கு அருகில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அங்கு மட்டும் பக்தர்கள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.

    கோவை வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    ரேஸ்கோர்ஸ் மற்றும் கொடிசியா மைதானத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
    Next Story
    ×