search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல்
    X

    ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல்

    பாகூர் அருகே பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கிராம மக்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு சாலை மறியலில் ஈடுபட்டார்.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜபரமகுரு (வயது38), இவருக்கு ஜீவா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ராஜபரமகுரு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பணிக்கு செல்ல வசதியாக ராஜபரமகுரு குடும்பத்துடன் பாகூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக ராஜபரமகுருவை கல்லூரி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்தது. இதனால் ராஜபரமகுரு மனவிரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சொந்த கிராமத்துக்கு சென்று வருவதாக ராஜபரமகுரு தனது மனைவியிடம் கூறி சென்றார். அங்கு தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள மாமரத்தில் ராஜபரமகுரு கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ராஜகுருவின் மனைவி ஜீவா பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே ராஜகுரு சாவுக்கு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிதான் காரணம் என கூறி சோரியங்குப்பம் மற்றும் பாகூர் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த தனவேலு எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் இறங்கினார்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் மற்றும் பாகூர் தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட தனவேலு எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும், விசாரணையில் மருத்துவ கல்லூரி நிர்வாகம் மீது தவறு இருந்தால் அந்த மருத்துவ கல்லூரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று தனவேலு எம்.எல்.ஏ. மற்றும் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தால் புதுவை - கடலூர் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×