search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கம் அருகே முல்லை செடிகள் கருகியதால் விவசாயி தற்கொலை
    X

    செங்கம் அருகே முல்லை செடிகள் கருகியதால் விவசாயி தற்கொலை

    முல்லை செடிகள் கருகியதால் மனம் உடைந்த விவசாயி மோட்டார் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    செங்கம்:

    செங்கத்தை அடுத்த கண்ணக்குருங்கை ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு அருண்குமார் (24), அசோக்குமார் (22) என 2 மகன்கள் உள்ளனர். ஏழுமலை அவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் முல்லை செடிகளை வைத்து வளர்த்து வந்தார். இந்த செடிகள் பூக்கும் தருவாயில் இருந்தது.

    இந்த செடிகளை பராமரிப்பதற்காக ஏழுமலை சுமார் ரூ.4 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வறட்சி காரணமாக கிணறு தண்ணீரின்றி வறண்டது. அதனால் முல்லை செடிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக ஏழுமலை மிகுந்த மனவேதனையில் காணப்பட்டுள்ளார்.

    இதனிடையே தண்ணீரின்றி செடிகள் கருக ஆரம்பித்தன. இந்த நிலையில் நேற்று மாலை நிலத்துக்கு சென்ற ஏழுமலை, கருகிய முல்லை செடிகளை கண்டு மேலும் மனமுடைந்து நிலத்தில் உள்ள மோட்டார் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக பாய்ச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×