search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது: கலெக்டர்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது: கலெக்டர்

    வடகாடு கிராமத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காது. தனியார் நிறுவனத்தின் உரிம விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கணேஷ் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் தொடர் போராட்டம் நடந்தது.



    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு அளித்த உறுதி மொழியை ஏற்று நெடுவாசலில் கடந்த 9-ந்தேதியும், நல்லாண்டார்கொல்லையில் 24-ந்தேதியும், வட காட்டில் 25-ந்தேதியும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.



    இதற்கிடையே கடந்த 25-ந் தேதி போராட்ட களத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையிலான அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில் நேற்று (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, போராட்டக்காரர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    அதன்படி நேற்று மாலை வடகாடு போராட்டக்குழுவினர் புதுக்கோட்டை வந்து கலெக்டரை சந்தித்தனர். கலெக்டர் கணேஷ், வட காடு போராட்டக்குழுவினரிடம் ஒரு கடிதத்தை வழங்கினார். அந்த கடிதத்தில் கடந்த 25-ந்தேதி வடகாடு போராட்டக்குழுவினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது உதவி கலெக் டர் அம்ரீத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களின் கோரிக்கைகளின் பேரிலும், நேரடியாக கலந்து ஆலோசனை செய்ததிலும் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1) வடகாடு பகுதியில் விவசாயிகளிடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் செய்து உள்ள நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, மறு சீரமைப்பு செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளது தொடர்பாக, தொடர்புடைய நிறுவனத்திற்கு உடன் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    2) ஆலங்குடி தாலுகா, புள்ளான்விடுதி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மூடவும், இது தொடர்புடைய நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து 9 மாத காலத்திற்குள் இப்பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    3) அரசாணையில் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் நடவடிக்கை கைவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்திலும் மீத்தேன் வாயு எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்காது எனவும் தெரிவிக்கப்படுகி றது.

    4) தமிழ்நாடு முதல்-அமைச்சர் செய்தி வெளியீட்டின் அடிப்படையில் வடகாடு மற்றும் வடகாடு அருகே இருக்கும் புள்ளான்விடுதி கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதாலும், கிராமத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் கிராமத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கத்துடன் இத்திட்டத்திற்கு எந்த ஒரு நிறுவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தால் உரிய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    வடகாடு போராட்டக் குழுவினரிடம் கடிதத்தை வழங்கிய கலெக்டர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் உரிமம் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்து உள்ளது. பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    எனவே பொது மக்கள் எதிர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும் தனியார் நிறுவனத்தின் உரிம விண்ணப்பம் மாவட்ட நிர்வாகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அளித்துள்ள இந்த உறுதிமொழி தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×