search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரட்டை குழந்தைகள் மரணம்
    X

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த இரட்டை குழந்தைகள் மரணம்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குறைந்த எடையில் பிறந்த இரட்டை குழந்தைகள் மரணமடைந்தது. இதையடுத்து மாயமான குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு நிறைமாத கர்ப்பிணி பிரசவத்திற்காக சேர்ந்தார். அவரது பெயர் சுதா என்றும், கணவர் பெயர் மாரியப்பன் என்றும் புளியங்குடி வள்ளியப்ப விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் என்றும் முகவரி கொடுத்துள்ளார்.

    அவருக்கு நேற்று முன்தினம் இரட்டை பெண் குழந்தைகள் குறைந்த எடையில் பிறந்தது. பிறந்த சில மணி நேரத்தில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று குழந்தையின் தாய் சுதா தனது இறந்த ஒரு குழந்தையுடன் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறி விட்டார்.

    அதன் பிறகு அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு குழந்தையும் நேற்று இறந்தது. அந்த குழந்தையை ஒப்படைக்க டாக்டர்கள் பெற்றோரை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து பாளை ஐகிரவுண்டு போலீசில் புகார் செய்தனர். ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். புளியங்குடி போலீசார் குழந்தையின் தாய் சுதா கொடுத்த முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது புளியங்குடியில் அப்படி ஒரு இடம் இல்லை என்றும், அது போலியான முகவரி என்றும் தெரியவந்தது.

    இதுகுறித்து புளியங்குடி போலீசார் குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×