search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் ஓட்டல், பேக்கரிகளில் தரமில்லாத உணவுகளை விற்றால் நடவடிக்கை: கலெக்டர்
    X

    சென்னையில் ஓட்டல், பேக்கரிகளில் தரமில்லாத உணவுகளை விற்றால் நடவடிக்கை: கலெக்டர்

    சென்னையில் ஓட்டல், டீக்கடை, பேக்கரிகளில் தரமில்லாத உணவுகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “உணவு பாதுகாப்பு சட்டம் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்குவதை உறுதி செய்துள்ளது. இதன் படி உணவு வணிகர்கள் தாங்கள் நடத்தும் உணவு வணிகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிட்டுள்ள, தடைசெய்யப்பட்டுள்ள உணவு கலப்படங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



    காய்கறி மற்றும் பழங்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அனுமதிக்கப்படாத ரசாயன மருந்துகளை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    தேயிலை தூளில் செயற்கையான வண்ணங்களை சேர்க்கவோ மற்றும் பயன்படுத்திய தேயிலை இலைகளை சேர்க்கவோ கூடாது.



    உணவு விடுதிகளில் உணவு பொருட்களில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.

    உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது.

    பொட்டாசியம் புரோ மெட் சேர்க்காத பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.

    சூடான டீ, காபி, சாம்பார், ரசம் ஆகியவைகளை பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்யக்கூடாது. பாலிதீன் பைகளானது பாலி எத்திலின், பாலி வினைல் குளோரைடு , பாலி ஸ்பிரின் ஆகிய வேதி பொருட்கள் கொண்டுள்ளது. ஆகையால் சூடான பொருட்களை அலுமினியம் பாயில் பேக்கிங்கில் பார்சல் செய்ய வேண்டும்.

    இட்லி உணவு பொருளை வேக வைப்பதற்கு பாலித்தீன் தாள்களை பயன்படுத்தக்கூடாது

    சமையலுக்கு அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    ஐ.எஸ்.ஐ. மார்க் முத்திரை இல்லாத குடிநீர் கேன்கள், அக்மார்க் முத்திரை இல்லாத நெய் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.



    சாலையோர தள்ளுவண்டி கடைகளில் உணவு பொருள் விற்பனை செய்பவர்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உணவு பண்டங்களில் ஈ மற்றும் தூசுக்கள் படியாவண்ணம் மூடி விற்பனை செய்யவெண்டும். செயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் சேர்க்கக்கூடாது.

    இந்நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சமீபத்தில் சென்னை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபொழுது மேற்படி உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறப்படும் நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளது.

    உணவு வணிகர்கள் மேற்சொன்ன உணவு பாதுகாப்பு சட்டவிதிகளை கடைபிடித்து பொது மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறினால், உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் 2011 ஒழுங்குமுறை விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்பட நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×