search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவுக்கு கிரண்பேடி பக்கபலமாக இருக்கிறார்: இந்திய கம்யூனிஸ்டு புகார்
    X

    பா.ஜனதாவுக்கு கிரண்பேடி பக்கபலமாக இருக்கிறார்: இந்திய கம்யூனிஸ்டு புகார்

    புதுவையில் பா.ஜ.க.வின் செயல்பாடுகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனைத்து வகையிலும் பக்கபலமாக உள்ளார் என இந்திய கம்யூனிஸ்டு புகார் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிதிச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதில் குறிப்பாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரும் பெரு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் பெயர்களையும், தொகையையும் தெரிவிக்க வேண்டியதில்லை எனக் கூறியுள்ளது.

    ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, கட்சிகளுக்கு ரூ.2000 நன்கொடை அளித்தால் கூட அதை காசோலையாக தந்து தெரிவிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். ஆனால் அதற்கு மாறாக அதிக நன்கொடையை திரட்டிக் கொள்வதற்காக பா.ஜனதா அரசு இவ்வாறு செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் கொடிகளை எரித்துள்ளனர். இதன் மூலம் புதுவையில் கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க.வின் செயல்பாடுகளுக்கு கவர்னர் கிரண்பேடி அனைத்து வகையிலும் பக்கபலமாக உள்ளார்.

    கொடியை எரித்த பா.ஜ.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாப்ஸ்கோ நிறுவனத்தில் 515 பல்நோக்கு ஊழியர்களின் பணி நிரந்தர ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்களை முறைகேடாக பணியில் அமர்த்திய அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    முந்தைய என்.ஆர். காங்கிரஸ் அரசுக்கும், தற்போதைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காங்கிரஸ் கட்சியினரும் தங்களுக்கு வேணடியவர்களை அரசு சார்பு நிறுவனங்களில் நியமிக்கவே எண்ணுகின்றனர். இதனால் அரசு சார்பு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிலை உள்ளது.

    இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.

    தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், நிர்வாகிகள் வி.எஸ்.அபிஷேகம், கே.முருகன், தினேஷ் பொன்னையா, கீதநாதன் உடனிருந்தனர்.

    Next Story
    ×