search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக பட்ஜெட்: பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்
    X

    தமிழக பட்ஜெட்: பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்

    பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள் என்று தமிழக பட்ஜெட் நிலை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி அறிக்கை மீதான விவாதம் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்ட போது, பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் அமைக்க முயன்று இருக்கிறார்கள். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை.

    புதிய மொந்தையில் பழைய கள்ளு என்று சொல்லி இருந்தேன். இது ஆளும் கட்சியினருக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கும். காங்கிரஸ் தரப்பிலும் பல்வேறு கருத்துகள் கூறி இருக்கிறார்கள்.

    தற்போது தமிழக அரசின் கடன் 3 லட்சத்து14 ஆயிரத்து 365 கோடி ரூபாய். இது பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும். மோசமான நிதிநிலை என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

    அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது அமைதி, வளம், வளர்ச்சி, மக்கள் வாழ்வில் முன்னேற்றம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. இப்போது அமைதி இருப்பதாக தெரியவில்லை.



    மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் போது வன்முறை, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம், வறட்சியால் விவசாயிகள் உயிரிழப்பு டெல்லி வரை சென்று போராட்டம், துப்பாக்கி சூட்டில் மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு, தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் டெல்லியில் தற்கொலை, தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று படிக்கவே பயப்படும் நிலை, குடிநீரை கேட்டு போராட் டம், பாமாயில், பருப்பு கேட்டு பெண்கள் போராட்டம் என்று தமிழகம் அமைதியை இழந்த மாநிலமாகவே இருக்கிறது.

    வளம், வளர்ச்சி என்றார்கள். அதுவுமில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகன் தலையில் ரூ.35 ஆயிரத்துக்கும் மேல் கடன் சுமை 250-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை, பால் உற்பத்தியாளர்களுக்கு விலை குறைவு, போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம், சாலை பணியாளர்கள் வேலை இல்லாமல் தற்கொலை செய்யும் அவலம் என்று நிலைமை நீடிக்கிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சியும் இல்லை.

    தமிழ்நாட்டில் ரூ. 2.4 லட்சம் கோடியில் தொழிற்சாலை அமைப்பதற்காக 98 பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் புதிய தொழிற்சாலைகள் இதுவரை வரவில்லை. தொழில் வளர்ச்சி பின்தங்கி விட்டது. நல்லாட்சி என்றார்கள். அதுவும் நடக்கவில்லை.

    அமைச்சர் தங்கமணி:- ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடந்தது. நெடுவாசல் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எதிர்க்கட்சி தலைவர் அரசை குற்றம் சாட்டியதால் அமைச்சர்கள் விளக்கம் அளிக்க வேண்டியது இருக்கிறது.

    மு.க.ஸ்டாலின்:- ஒரு அரசின் தலைமை செயலகத்தில் இருக்கிறது ஆனால் அங்கு தலைமை செயலகத்தில் வருமான வரி சோதனை நடந்து இருக்கிறது. தலைமை செயலாளர் சஸ்பெண்டு செய்யப்படுகிறார்.

    வீடுகளிலும் சோதனை நடந்து இருக்கிறது. தமிழ் நாட்டில் அமைதி இல்லை. வளர்ச்சி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு ஏற்றம் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

    தமிழக அரசின் பட்ஜெட்டை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் இப்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை கடந்த பட்ஜெட்டில் கடன் சுமை ரூ.2லட்சத்து 52 ஆயிரம் கோடி. இந்த முறை ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 360 கோடி. இது போல் கடன் சுமை அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த முறை பட்ஜெட் பற்றாக்குறை ரூ.9 ஆயிரத்து 154 கோடி. இந்த முறை ரு.15 ஆயிரத்து 930 கோடி.

    இதுபோல் ஆண்டுக்கு ஆண்டு பற்றாக்குறை அதிகரித்து கொண்டே போகிறது. 2006-ம் அண்டு தி.மு.க. ஆட்சியில் மூலதன முதலீடு இருப்பு அதிகமாக இருந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு மூலதன முதலீடு குறைந்து விட்டது.

    நிதி வருவாய் குறைந்து கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. நிதி நிலை படுமோசமாகி விட்டது. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது. நியாய விலை கடைகளில் வினியோகிக்கப்படும் பருப்பு, பாமாயில் வாங்க பணம் இல்லாததால் தாமதமாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    அமைச்சர் காமராஜ்- எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது நியாய கடைகளில் பொருட்கள் வழங்காததால் பெண்கள் போராட்டம் நடத்தினர் என்று சொன்னார். அது தவறு.

    தி.மு.க.வினர்தான் போராட்டம் நடத்தினார்கள். பணம் இல்லாததால் பொருட்கள் வாங்க தாமதம் ஆனது என்று சொல்வது சரியல்ல.

    அமைச்சர் தங்கமணி- புதிய மின் திட்டங்பகள் தொடங்கப்படவில்லை என்று எதிர்கட்சி தலைவர் கூறினார். ஆனால் 18 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி, பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே உள்ள திட்டங்கள் என்பதால் இதை குறிப்பிடவில்லை.

    மு.க.ஸ்டாலின்:- உணவு பொருள் வினியோகம் சரியாக நடைபெறவில்லை என்பதால் பெண்கள் போராட்டம் நடத்தியதை நான் ஆதாரத்துடன் நிரூபிக்க தயார். நிரூபித்து விட்டால் என்ன செய்வீர்கள்?

    அமைச்சர் காமராஜ்:- பெண்கள் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க.வினர் தான் கலந்து கொண்டார்கள்.

    மு.க.ஸ்டாலின்:- அரசு சார்பில் கொள்கை விளக்க பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன, இதில் ஆளுனர் உரைக்கும், நிதிநிலை அறிக்கைக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல்இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு லோக் ஆயுத்தா கொண்டு வருவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம். காவிரி கூட்டுக்குழு அமைப்போம்.

    கச்சத்தீவை மீட்போம். பாக்ஜலசந்தியில் பாதுகாப்பு அளிப்போம். புதிய குடிநீர் திட்டங்களை கொண்டு வருவோம், கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்படும். கிரானைட், தாதுமணல் விற்பனை ஆகியவற்றை அரசே ஏற்று நடத்தும் என்று வாக்குறுதி அளித்தனர். இதில் எதுவுமே நடைபெறவில்லை. 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் புதிய திட்டம் இல்லை. புதிய குடிநீர் திட்டமும் இல்லை. இந்த ஆட்சியில் எந்த புதிய திட்டமும் இல்லை. பழைய நிலைதான் நீடிக்கிறது.


    Next Story
    ×