search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த நகைக்கடை.
    X
    கொள்ளை நடந்த நகைக்கடை.

    பாளையங்கோட்டையில் பிரபல நகைக்கடையில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை

    பாளையங்கோட்டையில் பிரபல நகைக்கடையில் ரூ.20 கோடி மதிப்புள்ள 60 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளையங்கோட்டை மகாராஜாநகரை சேர்ந்தவர் பாபு. இவருக்கு சொந்தமான அழகர் ஜூவல்லர்ஸ் நகை கடை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு கோவில்பட்டி, பாளை முருகன்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

    பாளை முருகன்குறிச்சியில் 3 தளங்களில் அழகர் ஜூவல்லர்ஸ் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தங்க, வைர, வெள்ளி நகைகள் விற்பனைக்கு உள்ளன. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை அடைத்தனர். அதன்பின்னர் நம்பி, சுந்தரம் ஆகிய 2 இரவு காவலர்கள் பணியில் இருந்தனர்.

    இன்று காலையில் கடை உரிமையாளர் பாபு மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது நகைக்கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்த போது 3 தளங்களில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மாநகர துணை கமி‌ஷனர் பிரதீப் குமார், கூடுதல் துணை கமி‌ஷனர் இளங்கோ, குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் வரதராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையின் மாடி வழியாக கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. நகைக்கடையின் அருகில் புதிய கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் கட்டப்பட்டுள்ள கம்புகள் வழியாக ஏறி நகைக்கடையின் மாடியை அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த இரும்பு கதவை கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்டுள்ளனர்.

    பின்னர் அந்த துளை வழியாக கடையின் 3-வது தளத்திற்கு வந்துள்ளனர். பின்னர் ‌ஷட்டரை உடைத்து கடையினுள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளி சாக்குமூட்டையில் கட்டியுள்ளனர்.

    இவ்வாறு மற்ற 2 தளங்களிலும் ‌ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க- வைர நகைகளின் மொத்த மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    கொள்ளை நடந்த நகைக்கடை முன்பு ஊழியர்கள் திரண்டு நின்ற காட்சி.


    கொள்ளை நடந்த அழகர் ஜூவலர்ஸ் பாளையில் போக்குவரத்து மிகுந்த முருகன்குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவிலும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பகுதியில் நகைகடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து நெல்லை மாநகர கமி‌ஷனர் திருஞானம் உத்தரவிட்டுள்ளார். கடையை முழுவதுமாக நோட்டமிட்ட பின்னரே இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் 4 அல்லது 5 பேர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறினார்.

    இதையடுத்து நகை கடை ஊழியர்களிடமும், அருகில் உள்ள கட்டிடத்தில் வேலை செய்பவர்களிடமும் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது நகைக்கடையில் இருந்து சிறிது தூரம் மெயின் ரோடில் ஓடிச்சென்று நின்றது.

    நகைக்கடையின் அமைப்பை முழுமையாக அறிந்தவர்களே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக கருதும் போலீசார் கடையின் முன்னாள் ஊழியர்கள் குறித்தும் விவரம் சேகரித்து வருகின்றனர். இதனால் விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×