search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    83 ஆண்டுகளாக தூர் வாரப்படாத மேட்டூர் அணை - அரசு நடவடிக்கை எடுக்குமா?
    X

    83 ஆண்டுகளாக தூர் வாரப்படாத மேட்டூர் அணை - அரசு நடவடிக்கை எடுக்குமா?

    கடந்த 83 ஆண்டுகளாக செய்யாத தூர்வாரும் பணியை தற்போதாவது மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மேட்டூர்:

    தமிழகத்தில் 12 மாவட்டங்களில் விவசாயத்திற்கு முக்கிய நீராதரமாக விளங்குவது மேட்டூர் அணை.

    இந்த அணை மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    இதற்காக ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்பட 12 மாவட்டங்களிலும் விவசாயம் தழைத்தோங்கும்.

    ஆனால் கடந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்ததாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி அணையில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்தது.

    இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு போதுமான தண்ணீர் திறந்து விட முடியாததால் விவசாய பயிர்கள் கருகின. பல விவசாயிகள் அதிர்ச்சியில் இறந்தனர். மேலும் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 28.51 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 49 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    அணையில் தற்போது 28 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில் 15 அடி முதல் 18 அடி வரை உயரத்திற்கு வண்டல் மண் குவிந்துள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாது.

    மேட்டூர் அணையில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 28 அடி தண்ணீர் இருந்தது. தற்போது அதே நிலையில் நீர்மட்டம் உள்ளது. குடிநீருக்காக தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் மே மாதம் வரை அணை நீரை பயன்படுத்த முடியும். எனவே கோடையில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் கடுமையாக வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர் அணையை சுற்றி உள்ள தொழிற்சாலைகள் குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரில் கணிசமான அளவை உறிஞ்சி எடுத்து வருகின்றன. இதனால் காவிரியில் திறக்கப்படும் நீர் குறைந்த அளவே பாசன மாவட்டங்களை சென்றடைவதால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் அணையை நம்பியுள்ள சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தின் மத்திய பகுதியை சேர்ந்த பல கோடி மக்களின் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆண்டு கட்டப்பட்டது. அணையின் மொத்த உயரம் 214 அடி. அணையில் 124 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றாலும் பாதுகாப்பு கருதி 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும்.



    அணையின் நீர்பரப்பு பகுதி 59.25 சதுர மைல். ஆனால் இப்போது அணையில் சுமார் 5 மைல் அளவுக்கு மட்டுமே நீர் தேங்கி உள்ளது. கோடை வெயில் சேலம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் அணையில் தேங்கி உள்ள நீர் வேகமாக ஆவியாகி குறையவும் வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணை கட்டி 83 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒரு முறை கூட அணையை தூர் வாரவில்லை. இது வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளை கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    இந்த அணையை தூர் வாரினால் 15 முதல் 18 அடி வரை கூடுதலாக தண்ணீரை தேக்க முடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும். விவசாயம் மற்றும் குடி நீர் பிரச்சினைகளை தீர்க்கலாம். ஆனால் கடந்த 83 ஆண்டுகளாக மேட்டூர் அணையை தூர் வார யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை அரசியல் கட்சியினரும் யாரும் கண்டு கொள்ளாததால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்வி குறியாகி உள்ளது.

    தற்போது அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்துள்ளதால் 90 சதவீத நீர் பிடிப்பு பகுதி விளைநிலங்கள் போல காட்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் மேட்டூர் அணையை தூர் வாரினால் எளிதாக பணிகளை மேற்கொள்ள முடியும். கடந்த 83 ஆண்டுகளாக செய்யாத பணியை தற்போதாவது செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×