search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகர் தனபால் பதவி நீக்கக்கோரும் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு
    X

    சபாநாயகர் தனபால் பதவி நீக்கக்கோரும் மசோதா மீது இன்று வாக்கெடுப்பு

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க. கொண்டு வரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
    சென்னை:

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி தி.மு.க. கொண்டு வரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரி கடந்த 9-ந் தேதியன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் சட்டசபை செயலகத்தில் அவை விதி 68-ம் பிரிவின் அடிப்படையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் அந்தக் கடிதத்தைக் கொடுத்தனர்.

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகரை நீக்கக்கோரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

    அவை நிகழ்ச்சி நிரலில், கேள்வி நேரத்துக்கு அடுத்ததாக 2-ம் நிகழ்ச்சியாக மு.க.ஸ்டாலின் கொண்டு வரும் இந்தத் தீர்மானம் அச்சிடப்பட்டு உள்ளது.

    எனவே இன்று சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், அந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்கலாமா என்பதை அவையின் முடிவுக்கு சபாநாயகர் ப.தனபால் விடுவார். அதற்கு குறைந்தபட்சம் 35 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 35-க்கும் மேல் இருப்பதால், அந்தத் தீர்மானத்தை அவையில் விவாதிக்க ஆதரவு கிடைத்துவிடும்.

    உடனே ப.தனபால் சபாநாயகர் இருக்கையை விட்டு இறங்கி வெளியே சென்று விடுவார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அந்த தீர்மானம் தொடர்பாக அவையை நடத்துவார்.

    சபாநாயகரை நீக்கக் கோரும் தீர்மானத்தின் மீது பேசுவதற்கு தி.மு.க.வுக்கு வாய்ப்பளிக்கப்படும். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேட்டுக்கொண்டால் அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படலாம்.

    அதன் பின்னர் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். பொதுவாக குரல் வாக்கெடுப்புக்கே சபையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஆனால் தி.மு.க. வற்புறுத்தினால் ஒருவேளை எண்ணிக் கணிக்கும் முறைப்படி (டிவிஷன்) வாக்கெடுப்பு நடத்தப்படலாம்.

    அப்போது அவையில் பிளாக் வாரியாக, தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என்று தனித்தனியாக எம்.எல்.ஏ.க்கள் நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

    ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர் குறிக்கப்படும். பெயர்களை சட்டசபை செயலாளர் படிப்பார்.

    பின்னர் தீர்மானத்தை எதிர்ப்போர் தனியாகவும், நடுநிலை வகிப்போர் தனியாகவும் நிற்பார்கள். அவர்களின் பெயரை குறித்துக் கொண்டு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வாசிப்பார்.

    தீர்மானத்தை ஆதரிப்போர் அல்லது எதிர்ப்போரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தத் தீர்மானம் வெற்றியோ தோல்வியோ அடையும்.

    இந்தத் தீர்மானத்தில் சபாநாயகரோ, அல்லது துணை சபாநாயகரோ வாக்களிக்க இயலாது.

    ஏற்கனவே கடந்த மாதம் 18-ந் தேதி அரசின் நம்பிக்கைத் தீர்மான நடவடிக்கைகளில் ஏற்பட்ட பரபரப்பு போல, சபாநாயகர் பதவியில் இருந்து ப.தனபாலை நீக்கக்கோரும் தீர்மானத்தின் மீது இன்று நடத்தப்படும் வாக்கெடுப்பும் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே, சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×