search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயருகிறது
    X

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயருகிறது

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வானகரம், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை சமுத்திரம் உள்ளிட்ட 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் 43 சுங்க சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கசாவடிகளில் தனியாரும் 14 சுங்க சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து ஆண்டிற்கு ஒரு முறை 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 23 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் சரக்கு வாகனங்களின் வாடகை மட்டுமின்றி ஆம்னி பஸ்களின் கட்டணமும் உயர்ந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

    திருத்தணியை அடுத்த பட்டறைபெரும்புதூர், சூரப்பட், வானகரம், கோவை மாவட்டம் கன்னியூர், வாடிப்புரம், பரனூர், சேலம் மாவட்டம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி - சாலைபுதூர், பள்ளி கொண்டா, வாணியம்பாடி, நெல்லை மாவட்டம்- எட்டூர், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி,

    மதுரை பூதக்குடி, சிவகங்கை- லெம்பாக்குடி, லட்சுமணப்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை சமுத்திரம் ஆகிய 20 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


    அனைத்து வாகனங்களுக்கும் ரூ.10 கூடுதலாக இனி வசூலிக்கப்படும். சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வதால் அனைத்து பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை உயர வாய்ப்பு உள்ளது.

    சுங்க சாவடி கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்க செயலாளர் யுவராஜ் கூறியதாவது:-

    சுங்கசாவடிகளுக்கு ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனம் எண்ணிக்கை கூடும் போது கட்டணத்தை குறைக்க வேண்டுமே தவிர உயர்த்தக்கூடாது. வானகரம்- வாலாஜாபாத் 93 கிலோ மீட்டர் துரத்திற்கு 6 வழிப்பாதை அமைக்கப்படுவதாக கூறி சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    ஆனால் இதுவரையில் அங்கு 6 வழிப்பாதை அமைக்கப்படவில்லை. 4 வழி பாதைக்கு ஏன் கூடுதலாக கட்டணம் வசூலிக்க வேண்டும்.

    சாலைகளை பராமரிக்காமல், சாலை போடாமல் பணம் மட்டும் வசூலிக்கிறார்கள். மதுரவாயல்- தாம்பரம் பணி முடிந்துவிட்டது. எதற்காக இன்னும் டோல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது பற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
    Next Story
    ×