search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்வீக்கத்தால் அவதிப்படும் சிறுவன் அன்பரசு
    X
    கால்வீக்கத்தால் அவதிப்படும் சிறுவன் அன்பரசு

    தடுப்பூசியால் சிறுவனுக்கு புற்றுநோய் கட்டி: சுகாதாரத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    ஈரோடு சிறுவனுக்கு போடப்பட்ட தடுப்பூசி ரத்தக்கட்டு புற்றுநோய் கட்டியாக மாறியது தொடர்பாக சுகாதாரத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    ஈரோடு மாவட்டம் கொமரபாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் அன்பரசு (வயது 6). அன்பரசு பிறந்து 6-வது மாதத்தில், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசி தொடையில் போடப்பட்டது.

    ஊசிபோட்ட இடத்தில் சிறிய ரத்தக்கட்டு போன்று கட்டி உருவானது. இதற்கு சிகிச்சை பெற டாக்டர்களை சந்தித்த போது, நாளடைவில் சரியாகி விடும் என்று கூறி உள்ளனர்.

    ஆனால் அவை சரியாகாமல் நாளடைவில் பெரிதாக கட்டி வளர்ந்தது. தற்போது அன்பரசுக்கு அந்த கட்டி 3 கிலோ எடையில் புற்றுநோய் கட்டியாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக அந்த சிறுவனின் சிகிச்சைக்கு ரூ.3 லட்சத்துக்கும் மேல் செலவழித்தும் குணமடையவில்லை.

    கட்டி பெரிதானதால் நடக்க முடியாமல் அவனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இது பற்றி செய்தி வெளியானது.

    இந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தனர். அப்போது சிறுவனுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ஈரோடு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, குழந்தைகள் நலவாரிய ஆணையர் ஆகியோர் 27-ந்தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்று, பெற்றோருடன் பேசி, மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த சிறுவனுக்கும், பெற்றோருக்கும் தங்கும் இடத்துக்கு ஏற்பாடு செய்து, சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலோ அல்லது வேறு ஏதேனும் மருத்துவமனையிலோ சேர்த்து சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

    Next Story
    ×