search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
    X

    தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 6-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்திய மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற வாலிபர் உயிரிழந்தார்.



    இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.



    பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘6-3-2017 அன்று இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் பிட்ஜோ என்ற அப்பாவி இந்திய மீனவர் பலியானார். அதன்பின்னர், இலங்கை சிறைகளில் இருந்த 85 மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், இன்று மீண்டும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இலங்கை கடற்படை மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

    பாக் நீரிணையில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றுள்ள 10 மீனவர்கள் மற்றும் 129  படகுகளை விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மீனவர்கள் பயனடையும் வகையில், சிறப்பு தொகுப்பு திட்டத்திற்காக கேட்கப்பட்ட 1,650 கோடி ரூபாய் நிதியை விரைவாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.
    Next Story
    ×