search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உப்பளம் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து: அமைச்சர் கந்தசாமி தகவல்
    X

    உப்பளம் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து: அமைச்சர் கந்தசாமி தகவல்

    அடுத்த மாதம் முதல் உப்பளம் துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து இயங்கும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு வருவாயை ஈட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக நீண்டகாலமாக இயங்காமல் இருந்த புதுவை உப்பளம் துறைமுகத்தை மீண்டும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்காக சென்னை துறைமுக கழகத்தோடு கடந்த 15-ந்தேதி டெல்லியில் மத்திய மந்திரி நிதின்கட்காரி, முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த ஒப்பந்தப்படி சென்னை துறைமுகத்திற்கு வரும் பெரிய சரக்கு கப்பல்களில் இருந்து புதுவைக்கு சிறிய கப்பல்கள் மூலம் சரக்குகள் வரும். இந்த சரக்குகள் உப்பளம் துறைமுகத்தில் உள்ள குடோன்களில் இறக்கி வைக்கப்படும்.

    பின்னர் இங்கிருந்து கடலூர், சிதம்பரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படும். முதலாம் ஆண்டில் 4 லட்சம் டன் சரக்குகளை உப்பளம் துறைமுகத்தில் கையாள திட்டமிட்டுள்ளனர். அதன்பின் மறு ஆண்டு முதல் 10 லட்சம் டன் சரக்குகளை கையாளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக உப்பளம் துறைமுகத்தை தயார்செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அங்குள்ள குடோன்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அமைச்சர் கந்தசாமி இன்று பார்வையிட்டார். அங்குள்ள குடோன்களுக்கும் சென்று பார்வையிட்டார். சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அங்கிருந்த துறைமுக அதிகாரிகளிடமும் பணிகள் பற்றிய விபரங்களை கேட்டறிந்தார்.

    சென்னை துறைமுக கழகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி புதுவை துறைமுகம் அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் இயங்கும். இதற்கான பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. முகத்துவாரத்தை ஆழப்படுத்துவதற்காக ஏற்கனவே மத்திய அரசு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருந்தோம். காலதாமதமானாலும் தற்போது 34 ஆயிரம் டன் மணல் அள்ளப்பட்டுள்ளது. கடந்த 4 மாதமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து மீனவர்கள் தற்போது கடலுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    மேலும் துறைமுகத்திற்கு சரக்கு கப்பல்கள் வருவதற்காக காரைக்கால் தனியார் துறைமுகத்தோடு தூர்வார ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த கப்பலும் புதுவைக்கு வந்துள்ளது. அந்த கப்பல் மூலமும் தூர்வாரும் பணி நடைபெறும். போர்க்கால அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்பட்டு அடுத்தமாதம் துறைமுகம் இயங்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெயமூர்த்தி, துறைமுக செயலாளர் அருண்தேசாய், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் சுவாமிநாதன், துறைமுக செயற்பொறியாளர் ராஜேந்திரன், சுற்றுச்சூழல்துறை இயக்குனர் துவாரகாநாத் உள்ளிட்டோர் இருந்தனர்
    Next Story
    ×