search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமீனில் வெளிவந்த மூன்றாவது நாளில் சேகர் ரெட்டி மீண்டும் கைது
    X

    ஜாமீனில் வெளிவந்த மூன்றாவது நாளில் சேகர் ரெட்டி மீண்டும் கைது

    பழைய நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டி, சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
    சென்னை:

    பழைய நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டி, சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கப்பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் இவரது கூட்டாளிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    சேகர் ரெட்டியைத் தொடர்ந்து அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ. போலீசார் மற்றும் மத்திய அரசின் அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம்,  ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மற்ற மூவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனையடுத்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் சி.பி.ஐ.நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த 17-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், இன்று காலை சேகர் ரெட்டியை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர். சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பின் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர், எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரையும் வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    ஜாமீனில் வெளிவந்த மூன்றாவது நாளே சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×