search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
    X

    ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக 6 ஆயிரம் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12–ந் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (சசிகலா அணி) சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை கடந்த புதன்கிழமை சந்தித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து, சசிகலா அணியினர் கடந்த 16-ம் தேதி நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்கள் இப்போது எதிர்ப்பதாக கூறியதோடு, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, 21–ந் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு இருதரப்பினரையும் தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டு உள்ளது.

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் 22–ந் தேதி விசாரணை நடத்துகிறது. இதற்காக நேரில் ஆஜராகுமாறு சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு உத்தரவிட்டு உள்ளது.



    இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி இந்த பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 லட்சம் பேர் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×