search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசை- ஆணவத்தை தவிர்த்தால் மனிதன் மகிழ்ச்சியாக வாழலாம்: மாதா அமிர்தானந்தமயி பேச்சு
    X

    ஆசை- ஆணவத்தை தவிர்த்தால் மனிதன் மகிழ்ச்சியாக வாழலாம்: மாதா அமிர்தானந்தமயி பேச்சு

    மனிதன் ஆத்திரம், ஆசை, ஆணவம் போன்றவற்றை தவிர்த்தால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என அமிர்தானந்தமயி பேசினார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கவுண்டம் பாளையம் அருகே நல்லாம் பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி தேவி கலந்து கொண்டு சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மனிதன் ஆத்திரம், ஆசை, ஆணவம் போன்றவற்றை தவிர்த்தால் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். நம் நாடு கல்வி மற்றும் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் மக்களை கவலை அடைய செய்கிறது.

    இயற்கை சீற்றத்தை நம்மால் நவீன தொழில்நுட்பம் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதனுடய மனதில் என்ன உள்ளது என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. மனிதன் சுயநல நோக்கத்தோடு செயல்பட கூடாது. பொதுநல நோக்கம் இருக்க வேண்டும். பிறர் செய்யும் நல்ல காரியங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை அங்கீகரிக்க வேண்டும். மனதை கட்டுப்பாட்டோடு வைத்துகொண்டாலே பிற துன்பங்கள் நம்மை நெருங்காது.


    குழந்தைகளுக்கு பாரம்பரிய இதிகாசங்களான மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் எதிர் காலத்தில் துன்பத்தில் இருந்து விடுபடவும், சகிப்புத்தன்மை மற்றும் எதிர்ப்புகளை சமாளிக்க கற்றுக்கொள்வார்கள்.

    இந்து மதத்தில் எல்லா தர்மங்களும் சொல்லப்பட்டு உள்ளது. அதை ஒவ்வொருவரும் தெரிந்து, புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் பிற மதத்தினரையும் நாம் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும், பேராசை, கோபம், ஆணவம் உள்ளவர்களின் மனதில் அன்பு பூக்காது, பிறரிடம் அன்பு செலுத்துவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஏழை பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு சேலை, கல்வி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தொடர்ந்து பஜனை, தியானம், கூட்டுப் பிரார்த்தனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், எட்டி மடை சண்முகம் உள்பட ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×