search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடிக்கடி மனம் மாறும் தீபாவின் கணவர் மாதவன்
    X

    அடிக்கடி மனம் மாறும் தீபாவின் கணவர் மாதவன்

    தீபா பேரவையில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்குவதாக கூறிய தீபாவின் கணவர் மாதவன், இப்போது மீண்டும் மனம் மாறி தங்கள் ஆதரவாளர்களை குழப்பும் வகையில், தீபாவை முதலமைச்சர் ஆக்கவே கட்சி தொடங்க உள்ளதாக கூறுகிறார்.
    சென்னை:

    அரசியலில் குழப்பம் ஏற்படுவது வழக்கம். ஆனால் அரசியல் கட்சி தொடங்கும் போதே குழம்பி போய் இருப்பது ஜெ. தீபா- மாதவன் தம்பதிதான்.

    ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவரது அண்ணன் மகளான ஜெ. தீபாவை அரசியலுக்கு வர அ.தி.மு.க. வினர் வற்புறுத்தினார்கள்.

    முடிவெடுக்க முடியாமல் தவித்த ஜெ.தீபா ஒரு வழியாக எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அந்த அமைப்புக்கு நிர்வாகிகளை நியமிப்பதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. தீபாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பிரச்சனை உருவெடுத்தது.

    தீபா எடுத்த முடிவுகளில் உடன்பாடு இல்லாத மாதவன் கடந்த சனிக்கிழமை சி.ஐ.டி காலனியில் தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    நேற்று மதுரவாயலில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட போவதாக அறிவித்து இருந்தார்.

    கடந்த 17-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாதவன் இன்னும் வீட்டுக்கு போகவில்லை. ஓட்டலில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    தனிக்கட்சி தொடங்கப்போவதாக மாதவன் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று புதிய கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


    ஆனால் மதுரவாயலில் கூட்டம் நடத்த அனுமதி கிடைக்காததால் திருவேற்காடு கோவிலுக்கு சென்றார்.

    கோவில் பின்புறம் உள்ள மண்டபத்தில் ரகசிய கூட்டம் நடத்த முயன்றார். அதற்கும் போலீசாரும், போலீஸ் நிர்வாகமும் அனுமதிக்கவில்லை. இதை தொடர்ந்து மாதவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவை முதல்- அமைச்சர் ஆக்கவே கட்சி தொடங்க உள்ளேன். தீபா தொடங்கி உள்ளது பேரவை. நான் ஆரம்பிக்க இருப்பது கட்சி. நேர்காணல் நடத்தியே கட்சியின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கட்சி வேறு, பேரவை வேறு. கட்சியை நான் நடத்துவேன். நான் கட்சி ஆரம்பிக்க பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

    தொடர்ந்து தீபாவை முதல்-அமைச்சராக்க பாடுபடுவேன். கட்சியின் பெயர் மற்றும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து தொண்டர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×