search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் வே‌ஷம் கலையும்: வைகைச்செல்வன்
    X

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் வே‌ஷம் கலையும்: வைகைச்செல்வன்

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் பன்னீர்செல்வத்தின் துரோகங்கள் நாட்டிற்கே வெட்ட வெளிச்சமாகும். அதற்குப்பிறகு பன்னீரின் வே‌ஷம் கலைந்து போகும் என வைகைச்செல்வன் தெரிவித்தார்.
    சென்னை:

    அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேச்சிமுத்து என்கிற நபர் பன்னீர்செல்வமான கதை ஊரறிந்த ஒன்றுதான். உலக வரலாற்றில் விசுவாசத்தை விட துரோகங்களின் எண்ணிக்கை அதிகம். அப்படி ஒரு துரோக வரிசையில் தானே போய் முதல் ஆளாய் நிற்கிறார்.

    கூத்தில் கோமாளி வேடமிட்டு மக்களை மகிழச்செய்யும் ஒருவர் திடீரென்று ‘ராஜா வே‌ஷம்‘ கட்டினால் மக்கள் அதைக் கேலிக்கூத்தாகத்தான் பார்ப்பார்களே ஒழிய, ஒரு போதும் வே‌ஷத்திற்குக்கூட கோமாளியை ‘ராஜா’ வாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    சேவல் சின்னத்தில் 1989-ல் ஜெயலலிதா போடி தொகுதியில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து வேலை செய்த பன்னீர் சாதாரண தேநீர் கடை மனிதர்தான்.

    தானும், தன் குடும்பமும் எல்லாப் பதவிகளையும் அனுபவிக்க காரணம் யார்? என்பது பன்னீர் செல்வத்திற்கு நன்றாகவே தெரியும். தன்னை ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற முயற்சியில் தான் கீழே விழுந்ததை அறியாதவராக இன்னும் இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பொருளாளர், தற்காலிக முதல்வர் இத்தனையும் யாரால் தனக்குக் கிடைத்தது என்பதை பிப்ரவரி 5-ம் தேதிக்கு முந்தைய அவருடைய நடவடிக்கைகளே நமக்குத் தெளிவாக விளங்கும்.

    துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இல்லையென்றால் பேச்சிமுத்து பன்னீர் செல்வமாக மாறி இருக்க முடியாது.



    ஜெயலலிதா உயிரோடு இன்று இல்லை என்பதால் எதிரிகளோடு இணைந்து சதிவேலையில் ஈடுபட ஆரம்பித்தார். அதனால் தான், அதுவரை கட்சியிலும், ஆட்சியிலும் எந்தப்பதவியும் வேண்டாமென்று அமைதியாக இருந்த சின்னம்மா தலையிட நேர்ந்தது.

    தன்னை உயரத் தூக்கிப் பிடித்த தியாகத்தை இன்று துரோகத்தால் வீழ்த்த நினைக்கும் பன்னீரின் ஆட்டம் இனி எடுபாடாது. டி.டி.வி. தினகரன் ஆர்.கே.நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார் என்று தெரிந்த பின்னும் அவர் போட்டியிடுவது செல்லாது எனபேட்டி கொடுக்கும் மனம் எங்கிருந்து வந்தது? அப்படி ஒரு பேட்டியைத் தருவதற்கு முன் 17 ஆண்டுகளுக்கு முந்தைய தன்னுடைய நிலையை யோசித்திருந்தால் இப்படிச் சொல்லி இருக்க மாட்டார். மனசாட்சி என்று ஒன்று அவருக்கு இருக்குமானால் அதுவே அவரை உறுத்தட்டும்.

    பல்வேறு கால கட்டங்களில் கழகத்திற்கு துரோகம் இழைத்தவர்கள், அரசியல் விளையாட்டில் ரிட்டையர்டு ஆகி ஓய்வுக்காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பவர்களை எல்லாம் அருகில் வைத்துக்கொண்டு இரட்டை இலை எங்களுக்குத்தான் என்று சொல்லி வருகிறார். அமைப்பு ரீதியாக கழகம் பிளவேபடவில்லை என்கிற போது இரட்டைஇலை குறித்த விவாதம் தேவையற்றது.

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் பன்னீர்செல்வத்தின் துரோகங்கள் நாட்டிற்கே வெட்ட வெளிச்சமாகும். அதற்குப்பிறகு பன்னீரின் வே‌ஷம் கலைந்து போகும்.
    Next Story
    ×